சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் திராவிடர் விடுதலை கழகத்தில் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். பெரியார் மேல் தீவிர பற்றுக்கொண்ட இவர் காரைக்குடியை அடுத்த கோட்டையூர் உதயம் நகரில் தான் புதிதாக கட்டியுள்ள வீட்டின் சுற்றுச்சுவருக்கு உள்ளே தந்தை பெரியாரின் மார்பளவு பைபர் சிலையை அமைத்துள்ளார்.
இவரின் வீட்டிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் வீடு அமைந்துள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பாஜகவினர் இந்த சிலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது, மேலும், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி இந்த சிலையை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நேற்று இளங்கோவனின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் பெரியார் சிலையை அகற்ற சொன்னதற்கு இளங்கோவன் மற்றும் பெரியாரியவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பெரியார் சிலை மீது துணியை சுற்றி வலுக்கட்டாயமாக அங்கிருந்து போலிஸார் அகற்றினர்.
அதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதான் சாக்கு என சமூகவலைத்தளத்தில் சிலர் சில காவல்துறையினர் செய்த தவறுக்கு தமிழ்நாடு அரசை விமர்சித்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் இருவர் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பும் தற்போது வெளிவந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள எம்.எல்.ஏவும் திமுக இணையதள பிரிவின் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா "காரைக்குடியில் பெரியார் சிலையை நிறுவ கடைப்பிடிக்க வேண்டிய சட்டவிதிகளை சரியாக புரிந்துகொள்ளாமல் சலசலப்பு உண்டான சூழலில் அதிகாரிகள் இருவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது என்றும் #பெரியார் மண் !!!" என பதிவிட்டுள்ளார்.
அரசின் இந்த உடனடி அதிரடி நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.