நாடு முழுவதும் நேற்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கலந்து கொண்டார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் எம்.எம். அப்துல்லா.
உண்மை நிலை இப்படி இருக்க, வழக்கம் போல போலி பொய்தியை பரப்பும் பா.ஜ.க கும்பல், இருக்கை ஒதுக்காததால் குடியரசு தின நிகழ்ச்சியை எம்.பி எம்.எம். அப்துல்லா புறக்கணித்துச் சென்று விட்டதாக அவதூறுகளைப் பரப்பினர். இது உண்மை என நம்பி சில ஊடகங்களும் தவறாகச் செய்திகளை வெளியிட்டன. இதையடுத்து இந்த அவதூறுகளுக்கு மறுப்பு தெரிவித்து, என்ன நடந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ள எம்.எம். அப்துல்லா, “தவறான தகவல். சமீபகாலமாக எனது இடுப்பு எலும்பில் பிரச்சனை உள்ளது. கையில் ஊன்று கோலுடன் நடப்பதைப் பார்த்து இருப்பீர்கள். அதிக நேரம் அமர முடியாது. மரியாதைக்குச் சிறிது நேரம் இருந்து விட்டுக் கிளம்பினேன். உடல் நலக்குறைவு என்பது யாருக்கும் வரும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் தனது உடல்நிலை சரியில்லை என்பதை கடந்த ஜனவரி 12ம் தேதியே முகநூல் பக்கத்தில் எம்.எம். அப்துல்லா பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “ஜனவரி 02 ஆம் தேதி அதிகாலை மருத்துவமனையில் சேர்ந்தேன். வரும் 17 இரவு டிஸ்சார்ஜ். மொத்தமாக 16 நாட்கள்.. அரை மாத மருத்துவமனை வாசம். ‘’அதான் ஆஸ்பிட்டலயே பார்த்துப்பாங்களே.. அப்புறம் எதுக்கு வெட்டியா கூட ஒரு ஆளு! ஒருத்தரும் வேணாம்னு’’ சொல்லிவிட்டு தனியாவே வந்துட்டேன்.
இன்னும் அஞ்சு நாள் ஓட்டிட்டா ஊரைப் பார்க்கக் கிளம்பிடலாம்.. சக்கரைப் பொங்கல் வெண் பொங்கல் சமத்துவப் பொங்கல் போல எனக்கு இந்த வருடம் தனிமைப் பொங்கல்" என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் 20 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தும், குடியரசு தின விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்துடனே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா வந்து சென்றுள்ளார். ஒரு செய்தியை முழுமையாக ஆராய்ந்து வெளியிட வேண்டிய ஊடகங்கள் கண்களை மூடிக்கொண்டு செய்தி வெளியிடுவது ஊடக அறத்திற்கு எதிரானது எனவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் போலி செய்திகள், அவதூறு பிரச்சாரங்களையே தனது கட்சியின் உத்தியாக கொண்டுச் செயல்படும், பா.ஜ.க - அ.தி.மு.க கும்பல்களின் இதுபோன்ற போலி செய்திகளை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் பலரும் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.