சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் ஒன்று வழக்கம்போல் நேற்று இரவு இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்திற்குள் மின்சார ரயில் வந்தது.
அந்நேரம் நடைமேடையில் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணும், இளைஞரும் திடீரென ரயில் முன்பு குதித்தனர். இதில் அவர்கள் மீது ரயில் மோதி பின்னர் நின்றது. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அவர்களுக்கு என்ன ஆனது என்று பார்த்த போது இளம் பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பலத்த காயத்துடன் இருந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து இருவரும் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் இளைஞர் கீழ் கட்டளை பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பதும், இவர் தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரிந்தது.
அதேபோல் உயிரிழந்த பெண்ணின் முகம் சிதைத்துள்ளதால் அவர் யார் என கண்டுப்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போலிஸார் அவரின் அடையாளங்களை வைத்து யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் காதல் பிரச்சனை காரணமாக இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் போலிஸார் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.