2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிறகு பிப்ரவரி 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளனர்.
தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டது. வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களைச் சந்தித்து ஆதரவு பெற்றார்.
பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆதரவு கோரினார். இதையடுத்து இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக நேற்று கமல்ஹாசன் அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவரான நண்பர் கலைஞானி கமலஹாசன் தனது கட்சி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நண்பர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தரும் என்று தனது அறிக்கைமூலம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
மதச் சார்பற்ற ஜனநாயகத் தத்துவங்களில் நம்பிக்கையுள்ள அவரும், அவரது கட்சியும் இன்றுள்ள அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கினை தடுத்து நிறுத்த- மதவெறித் தீயை அணைக்க - அனைவரும் ஒன்று சேர வேண்டியது எப்படி முக்கியமோ அதனை அப்படியே உணர்ந்து அறிவித்திருப்பது சீரிய முடிவாகும். வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.