பா.ஜ.க.வின் மாநில நிர்வாகியாக இருப்பவர் டெய்சியின் மகள்தான் மருத்துவர் ஷர்மிகா. சித்த மருத்துவம் படித்த இவர், பிரபல யூடியூப் சேனலுக்கு மருத்துவ குறிப்புகள் வழங்கி வருவார். உடல் உபாதைகள், இதை சாப்பிடலாம் - இதை சாப்பிடக்கூடாது என்று டிப்ஸ் வழங்கி வருவார்.இப்படி மருத்துவர் என்ற போர்வைக்குள் இருந்து யூடியூப் சேனல் மூலம் மறைமுக மத பிரச்சாரத்தை செய்வதாக ஷர்மிகாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஏனெனில் இவர் அளித்த பேட்டிகளில் மாட்டுக்கறி, கோழிக்கறி உட்பட அனைத்தையும் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.
அதாவது அவர் அளித்த பேட்டி ஒன்றில், "மாட்டுக்கறி என்பது நாம் கடவுளாக பார்க்கும் ஒரு அழகான விஷயம். அதையும் மீறி சொல்ல வேண்டுமானால், இந்திய மக்கள் DNA-விலே தங்களை விட பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமானம் ஆகக்கூடிய சக்தி இல்லை. ஆடு, கோழி, கெளதாரி என நம்மை விட சிறிய மிருகங்களை சாப்பிட்டால் நமக்கு ஒன்றும் ஆகாது. ஆனால் பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமானம் பிரச்னை ஏற்படும்" என்றார்.
தொடர்ந்து மற்றொரு பேட்டியில், "எடை குறைக்க 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்துவிட்டு, 3 கிலோ எடை குறைந்தால் கூட, பின்னர் ஒரே ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் அதே 3 கிலோ எடை ஒரே நாளில் ஏறும்" என்றார். இதனைத் தொடர்ந்து மற்றொரு பேட்டியில், "பெண்கள் அயோடின் உப்பை பயன்படுத்த கூடாது; பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி சிறந்தது. எனவே அதனை சாப்பிடுவதில் கவனம் வேண்டும்" என்றார்.
மேலும் "குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாக மாறும், தினசரி 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் அழகாகும், ஷாம்பூ தான் முடிக்கு விஷம்.." என்று பல விதமான கருத்துக்களையும் வாரி வழங்கி வருகிறார் ஷர்மிகா. ஆரம்பத்தில் இவர் அளித்த டிப்ஸ்களை பெரிதாக பேசப்படாத நிலையில், இவர் தொடர்ந்து கூறி வந்த பொய்கள் வெளிவந்தன.
முன்னதாக இவர் அள்ளிவிட்ட பொய்கள் குறித்து தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் கூறுகையில், "ஷர்மிகா ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவராக, சமூக ஊடகங்களில் கருத்துகள் சொல்ல எந்த தடையும் இல்லை. ஆனால் மருத்துவ விதிகளின் படி தவறான கருத்தை பரப்பக் கூடாது.
அதுவும் சித்த மருத்துவத்தில் மாட்டுக்கறி இல்லை எனவும் எந்த இறைச்சியும் சாப்பிக் கூடாது என்று குறிப்பிடவில்லை. யாருக்கு சத்தான உணவு தேவைபடுகிறதோ அது சைவம் ஆனாலும் சரி, அசைவம் ஆனாலும் சரி அவர்கள் விருப்பம் படி சாப்பிடலாம். மேலும் ஷர்மிகா சொல்வது போன்ற எந்த ஆதாரமும் இல்லை. தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள இதுபோல பேசுகிறார்.
ஒரு மருத்துவர் மருத்துவரீதியான கருத்துகளை மட்டுமே மக்களிடையே சொல்லவேண்டும். மருத்துவத்திற்கு அப்பாற்றப்பட்டு சொல்லக்கூடாது. மக்களிடம் தவறான கருத்து கூறிய சித்த மருத்துவர் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியிருந்தார்.
அதோடு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ் ஐ.ஏ.எஸ் ஷர்மிகாவின் மேல் தவறு நிரூபிக்கப்பட்டார் அவரின் லைசென்ஸ் கேன்சல் செய்யப்படும் என கூறியுள்ளார். இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய அவர், "சித்த மருத்துவர் ஷர்மிகா மக்களை தவறாக வழிநடத்துவதால்தான், தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதற்காக, சித்த மருத்துவர் உள்ளடக்கிய மருத்துவ வல்லூநர்கள் கொண்ட குழுவையும் நியமித்துள்ளோம். அக்குழுவினர் சித்த மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளுக்கு எதிராக ஷர்மிகா என்னென்ன பேசியுள்ளார்? விதிமீறல் செய்துள்ளாரா? என்பதையெல்லாம் ஆராய்ந்து, ஷர்மிகாவின் விளக்கத்தையும் கேட்டு எனக்கு ரிப்போர்ட் கொடுப்பார்கள். அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கை என்பது குறித்து முடிவு செய்வோம்.
மருத்துவ வல்லுநர் குழுவின் ரிப்போர்ட் வந்தபிறகு, ஷர்மிகா கவுன்சிலின் விதிகளை மீறியுள்ளாரா? என்பதை ஆராய்ந்து தற்காலிகமாக அவரது பதிவு எண்ணைக் கேன்சல் செய்வோம். அது ஆறு மாதமா, ஒரு வருடமா என்பதெல்லாம் வல்லுநர் குழு முடிவு செய்யும்" என்றார். அதாவது, டாக்டர் ஷர்மிகாவின் லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டால், அந்த காலக்கட்டத்தில் தன்னை மருத்துவர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு சிகிச்சையோ ஆலோசனையோ வழங்கமுடியாது" என்றார்.
இந்த நிலையில் அவர் வெளியிட்ட தவறான தகவலுக்கு நேரில் பதிலளிக்குமாறு அனுப்பப்பட்ட நோட்டீஸின் எதிரொலியாக, இன்று அவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் ஆஜரானார்.
அப்போது தனது கருத்துக்கள் குறித்து வாய்மொழியாக அவர் பதில் அளித்த நிலையில், பிப்.10ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு சித்த மருத்துவ இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.