“தமிழ்நாடு சட்டப்பேரவையையும், தேசிய கீதத்தையும் அவமதிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஆளுநர் பாதியில் எழுந்து சென்றது குறித்தும், சட்டப் பேரவையில் அண்ணா, கலைஞர் பெயர்களை திட்டமிட்டு ஆளுநர் தனது உரையில் புறக்கணித்தது குறித்தும் தனியார் செய்தித் தொலைக்காட்சியின் கேள்விகளுக்கு கழக மாணவர் அணி மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி பதிலளித்தார்.
தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு கழக மாணவரணி மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி பேசுகையில், “தமிழ்நாட்டு ஆளுநர், ஆளுநராக செயல்படாமல் ஆர்.எஸ்.எஸ்காரராக செயல்படுவதுதான் பிரச்சனைகளுக்கு காரணம். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஒருபோதும் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்க மாட்டார்கள்.
மத்தியில் பா.ஜ.க அரசு பதவி ஏற்ற பிறகு எதிர்க்கட்சிகளின் சட்டமன்றத்தை சிதைக்க ஆளுநர் பதவியை பயன்படுத்துகிறது. சட்டமன்றத்தில் முதல் நாளில் முதலமைச்சர் பேசக்கூடாது என்று எந்த விதியும் இல்லை. மேற்குவங்கம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர் இல்லாமலேயே சட்டமன்றத்தை கூட்டுகின்றார்கள் . தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆளுநர் என்கின்ற பதவிக்கு கொடுத்த மரியாதையை ஆளுநர் காப்பாற்றத் தவறிவிட்டார்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக சனாதனம், மனுதர்மம் என்று தொடர்ந்து பேசி வரும் ஆளுநர், அடியாள் வேலை பார்க்கத்தான் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவை ஒன்றுகூடி தயாரித்த ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள சமூகநீதி என்பதையும் பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் பெயர்களையும் படிக்காமல் தவிர்த்திருக்கிறர் ஆளுநர். இந்த ஐந்து தலைவர்களும் இல்லாத தமிழ்நாட்டு அரசியலை ஆளுநர் விரும்புகிறாரோ என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் கோட்சே பெயரையும், சனாதனத்தின் பெயரையும் ஆளுநர் உச்சரிக்க விரும்பினால் மயிலாப்பூர் அல்ல, தமிழ்நாட்டின் எந்தப் தொகுதியில் வேண்டுமானாலும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதலமைச்சராக வந்து தன் விருப்பப்படி உரை நிகழ்த்தட்டும்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டதால்தான் அவைக்குறிப்பில் இடம் பெறும் வாசகங்கள் குறித்து முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வரும் சூழல் ஏற்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கக்கூடிய உரிமையின்படியே முதலமைச்சர் தனது தீர்மானம் மூலம் ஆளுநருக்கு கடிவாளம் போட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கத் தெரியாத ஆளுநர் அதை சகித்துக் கொள்ள முடியாமல் பேரவையில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.