சென்னை தி நகரிலுள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவர்களை அண்ணாமலை மிரட்டினார்.
மேலும் காயத்ரி ரகுராம் முதல் ரபேல் வாட்ச் வரை பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் கடுப்பான அண்ணாமலை கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், அவர்களிடம் நீங்கள் எந்த செய்தி என்றும், உங்கள் பெயர் என்ன என்றும் மிரட்டினார். அதோடு அண்ணாமலை ஆத்திரப்பட அவருடன் இருப்பவர்களும் பத்திரிக்கையாளர்களிடம் சீறினார்கள்.
மேலும் அண்ணாமலை பத்திரிகையாளரது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தொடர்ந்து அவமானப்படுத்தியே வந்தார். சில யூடியூப் சேனல்கள் சார்பாக அவரிடம் கேள்விகேட்டபோது, "கேள்வி கேட்க நீங்கள் யார்? அப்படி ஒரு யூடியூப் சேனல் இருக்கிறதா? வெறும் 40 ஆயிரம் ரூபாய் கேமரா, மொபைல் போன் வைத்துக்கொண்டு லைக் வாங்குவதற்காகப் பேட்டியெடுக்க வந்துவிடுவதா?" என்று டிஜிட்டல் மீடியாவை அவமானப்படுத்தியுள்ளார்.
அதோடு கேள்வி கேட்பது யாராக இருந்தாலும் அவர்கள் பெயர், சேனல் பெயரையும் கூறிவிட்டு கேளுங்கள் என்று திமிரோடு கூறிய அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் இந்த செயலுக்கு பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அடிப்படை நாகரீகம் இல்லாமல் தான்னோறித்தனமாக அண்ணாமலை நடந்து கொண்டு வருவதாக சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாஜக தலைவர் அண்ணாமலை, "பத்திரிக்கையாளர்களிடம் முதிர்ச்சியற்று நடந்துகொண்டதைப் பார்த்தேன். ஒன்றிய அரசில் இருக்கிறோம் என்ற பொறுப்பே இல்லாமல், அடிப்படை நாகரீகமும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக கூச்சல் எழுப்புவது மக்களின் அறிந்துகொள்ளும் உரிமையைக் காலில் போட்டு மிதிப்பதாகும்.
ஊடகங்களை மிரட்டியும், உருட்டியும் வரும் போக்கினை பத்திரிக்கையாளர் சங்கங்கள் பல முறை கண்டித்துள்ளன. அவர் திருந்தவில்லை. அவர் சார்ந்துள்ள கட்சியாவது திருத்துமா?" என தெரிவித்துள்ளார்.