இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென். இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகரில் தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். பிரதமர் நரேந்திர மோடி தனக்கு நேரம் கிடைத்தபோது எல்லாம் தாயாரை நேரில் சந்தித்து வந்தார்.
இந்நிலையில், ஹீராபென் மோடிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஹீராபென் மோடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தாயாரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.பின்னர் தாயாரின் உடலை தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றினார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி, முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தங்கள் அன்புத்தாயார் ஹீராபா அவர்களுடன் தாங்கள் கொண்டிருந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை அனைவருமே அறிவோம். அன்னையின் இழப்பினால் உண்டாகும் வலி என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாதது. தங்கள் தாயாரின் இழப்பினால் நான் அடைந்துள்ள துயரை விவரிக்கச் சொற்கள் இன்றித் தவிக்கிறேன்.
துயர்மிகு இந்நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். தாயாருடன் தாங்கள் கொண்டிருந்த அழகிய நினைவுகளில் அமைதியும் இளைப்பாறுதலும் பெறுவீர்களாக." என தெரிவித்தள்ளார்.