சென்னையில் இன்று எடப்பாடி பழனிசாமி அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனால் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகம் முன்பு அதிகமான தொண்டர்கள் கூடியிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி வந்தபோது, தொண்டர்கள் அவரை நெருங்கி சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி உச்சிமாகாளி வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
பின்னர் கூட்டம் கலைந்த பிறகுதான் உச்சிமாகாளிக்கு தான் வைத்திருந்த பணம் காணவில்லை என தெரியவந்தது. யார் என் பணத்தை எடுத்தது என அங்கிருந்த அனைவரிடம் கேட்டு பார்த்தும் காணாமல் போன பணம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நம்முடைய கட்சி கூட்டத்திலேயே பணத்தை யார் திருடி இருப்பார்கள் என்ற குழப்பத்திலும் வேதனையிலும் இருந்த உச்சிமாகாளி, பின்னர் பணம் திருடுபோனது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க-வில் ஒற்றை தலைமை பிரச்னை சில மாதங்களாகவே இருந்து வருகிறது. இதனால் அ.தி.மு.க - எடப்பாடி பழனிசாமி அணி என்றும், பன்னீர்செல்வம் அணி என்றும் இரண்டாக உடைந்து உள்ளது. இதையடுத்து அ.தி.மு.கவை யார் கைப்பற்றுவது என இரண்டு பேருக்கும் இடையே போர் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.