பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 49வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பெரியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள அவரது சிலையும், திருஉருவப்படமும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தந்தை பெரியாரின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது வீர வணக்கம், வீர வணக்கம்... தந்தை பெரியாருக்கு வீரவணக்கம்! என தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், எம்.கே. மோகன், ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு ஆகியோர் உள்ளனர்.
இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “தந்தை பெரியாரின் 49-ஆவது நினைவுநாள்! வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்; நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்; ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்! Periyar is more than flesh. He's an idea. And his ideas are timeproof.” எனத் தெரிவித்துள்ளார்.