பிக் பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? சமூகதளங்களில் நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் போட்டியை அல்ல; விஜய் டி.வி-யில் நடக்கும் போட்டியை சொல்கிறேன்.
இந்த பாத்திரத்தின் பெயர் அசீம். தற்போதைய பிக் பாஸ் சீசனில் வீட்டுக்குள் இருப்பவர். நேற்று இவர் விக்ரமனை ‘கட்டபஞ்சாயத்து’ எனப் பேசியது பரவலாக எல்லாருக்கும் எரிச்சலைக் கொடுத்திருக்கிறது. அதற்கு விக்ரமன் அசீம் மீது தன்னுடைய கோபத்தையும் அங்கு வெளிப்படுத்தியிருக்கிறார். என்னுடைய யோசனை எல்லாம் இவர் எந்தளவுக்கு சாமர்த்தியமாக விளையாடுகிறார் என்பதுதான்.
அசீம் பிக் பாஸின் எல்லா சீசன்களையும் பார்த்து வந்தவர் என பெயர் பெற்றவர். பிக் பாஸில் எதைப் பேசினால் எடுபடும், நீடிக்க முடியும் என்றெல்லாம் புரிந்தவர். அடாவடியாக பேசுபவர். கூச்சமின்றி பொய்களை பேசித் திரிபவர். எவர் பேசுவதையும் காதில் போட்டுக் கொள்ளாதவர்.
தேவைக்கு ஏற்ப பேசும் நபர். முதல் முறையாக ஒரு விளையாட்டின்போது நேர்ந்தவொரு சண்டையில் அமுதவாணனிடமும் ஷிவினிடமும் விக்ரமனிடமும் பாவனைக் காட்டி பேசி அருவருப்புடன் நடந்து கொண்டார். கமல் அதை கண்டித்து பேசினார். எனவே அடுத்த சில நாட்கள் அடக்கி வாசித்தார். அடுத்த சில வாரங்களில் கமல், அசீமின் நடத்தைக்கு சர்டிபிகேட் வழங்கினார். எனக்கு நம்பிக்கை பிறக்கவில்லை.
ஏனெனில் அசீம், தனலட்சுமி போல் உள்ளுணர்விலிருந்தோ மணிகண்டன் போன்ற பிறரைப் போல தன்னியல்பிலோ செயல்படவில்லை. அசீமுக்கு ஒரு திட்டம் இருந்தது. எல்லா பிக் பாஸ்களிலும் Good Vs Evil என்கிற பாணியில்தான் பாதிக்கும் மேல் சீசன் நகரும். கடந்த சீசனுக்கு முந்தைய சீசனில் அந்த நன்மை, தீமை இடையிலான சண்டை உச்சம் பெற்றது.
பாலாவின் அநாகரிகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆரி வீட்டுக்குள் ஒதுக்கப்பட்டார். ஆனால் அவர் அறத்துடன் தன் விஷயங்களை முன் வைத்துக் கொண்டே இருந்தார். பிக் பாஸின் இறுதியில் முதல் இடம் ஆரிக்கும் இரண்டாம் இடம் பாலாவுக்கும் கிடைத்தது.
முதல் இடம் கிடைக்கிறதோ இல்லையோ இரண்டாம் இடம் கிடைப்பது சுலபம். Good vs Bad என்கிற இருமையில் bad என்கிற இடத்தை நீங்கள் செய்யத் தொடங்கி விட்டால் இரண்டம் இடம் கிடைத்து விடும். அசீம், தொடக்கம் முதலே தெளிவாக தன்னை கெட்டவனாக முன்னிறுத்திக் கொள்கிறார். காரணம் ஒன்றுதான். இரண்டாம் இடம்! அதற்கு அவர் பேசுபவை எதுவும் நாகரிகத்தின் விளிம்பை கூட தொட முடியாதவை.
வார்த்தைகளை கொட்டுதல், பிறரை மட்டம் தட்டுதல், அக்கறையுடன் கேட்கபடுவதை கொச்சைப்படுத்துதால், நியாயமான விமர்சனங்களை ஏற்காமல் பதிலடியாக அவதூறுகளை செய்தல் எனத் தெளிவாக சிறுமையின் இடத்தை தேர்ந்தெடுக்கிறார்.
குறிப்பாக யாருக்கு இடையில் சண்டை நடந்தாலும் அதற்குள் நுழைந்து ஓர் ஆட்டம் ஆடி, தன் பங்கை உறுதியாக்கி விடுவார். யாரோ இருவருக்கு இடையே நடக்கும் மோதலிலும் தன்னை நிலைப்படுத்துவார். யாரோ இருவருக்குள் நடக்கும் உரையாடலுக்குள்ளும் தன்னை நிலைநிறுத்துவார். கிட்டத்தட்ட ‘இழவு வீடா இருந்தா, நான் பொணமா இருக்கணும். கல்யாண வீடா இருந்தா நான் மாப்பிள்ளையா இருக்கணும்’ பாணி.
தற்போது அவர் ‘கட்டப்பஞ்சாயத்து’ என விக்ரமனை சுட்டி அவர் பேசியிருப்பது அருவருப்பின் உச்சம். ஆனால் அவருக்கு அது பிரச்சினை இல்லை. அதிகபட்சம் போனால் கமல் திட்டுவார். ஆனால் அவருக்கு இரண்டாம் இடம் உறுதிப்படும். அது போதும் அவருக்கு. அவர் திருந்த மாட்டார். ஏனெனில் அவர் தன்னியல்பிலோ உள்ளுணர்வில் இருந்தோ அந்த தன்மையை வெளிப்படுத்தவில்லை. அவர் தெளிவான திட்டத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
சமூகதளங்களிலும் அசீம்கள் உண்டு. தமிழ்ச்சூழலின் பிரத்தியேகதையான மார்க்சய - அம்பேத்கரிய - பெரியாரிய ஒருங்கிணைவில் இருந்து பேச மாட்டார்கள். அதைப் பிளக்கும் அடையாள அரசியலை முன் வைத்துப் பேசுவார்கள். அதைக் குறித்து அக்கறையுடன் நாம் விமர்சனம் வைக்கும்போது, கள்ள மவுனம் காப்பார்கள். அல்லது அதை அவதூறாக்குவார்கள்.
மொத்த இந்தியாவும் பாஜகவை எதிர்ப்பதில் கேரள மாடலையும் தமிழ்நாட்டு மாடலையும் வியந்தோதும்போது இவர்கள் கிளம்பிச் சென்று தமிழ்நாட்டுக்கும் வட நாட்டுக்கும் வித்தியாசமில்லை என்றும் இதுதான் பெரியார் பூமியா என்றும் தங்களின் ஆதாயத்துக்காக மட்டையடி அடித்து வித்தியாசமாக சிந்திப்பதாகவும் புரட்சிகரமாகப் பேசுவதாகவும் காண்பித்துக் கொள்வார்கள். அடிப்படையில் தமிழ்நாட்டில் இவர்களின் லட்சணம் தெரியும்.
இவர்கள் களத்தில் இறங்காமலேயே அரசியல் கனவு காணும் திருட்டுத்தனம் தமிழ்க்களத்துக்கு தெரியும். சீந்தக் கூட யாரும் இருக்க மாட்டார். இவர்களாக ஏதேனும் நிகழ்ச்சிக்கு சென்று, நானும் ‘புரட்சிப் பரோட்டா செய்கிறேன் பார்’ என பிதற்றிக் கொள்வார்கள்.
புது ஊருக்கு சென்று கடை போட்டால் உண்மை தெரியும் வரையிலேனும் கொஞ்சம் வியாபாரம் பார்க்கலாம் அல்லவா? எனவே வட நாட்டுப் பக்கம் சென்று ‘தமிழ்நாடு வேஸ்டு, பெரியாரிஸ்டுகள் திமுகவினர் கம்யூனிஸ்டுகள் எல்லாம் டுபாக்கூர்’ என ஆங்கிலத்தில் வரிவரியாக ட்வீட்டிட்டு ஆதாயம் பெற முயலுவார்கள். அவர்களை திட்டுங்கள். காறி உமிழுங்கள். நட்பு பாராட்டுங்கள். எல்லாவற்றிலும் ட்வீட்டிட்டு அடையாளம் தேடுவது எப்படி என்பது மட்டுமே அவர்களின் பிரதான நோக்கமாக இருக்கும்.
எனவே அசீம்கள் மீது விக்ரமன்களுக்கு வரும் கோபம் தனிப்பட்ட கோபம் அல்ல, அரசியல் ரீதியிலான கோபம். அந்தக் கோபம் நியாயத்திலிருந்து விளைவது. எந்த ஆதாயமும் எதிர்பாராதது.
எல்லா காலங்களிலும் அசீம்கள் இருந்திருக்கின்றனர். காலந்தோறும் அவர்களின் பெயர்கள் மட்டும் யூதாஸ், எட்டப்பன், ப்ரூட்டஸ் என்றெல்லாம் மாறி வந்திருக்கின்றன. மற்றபடி வரலாற்றின் குப்பைத்தொட்டிதான் அவர்களின் அனைவருக்குமான இடமாக நீடிக்கிறது.