கும்பகோணத்தில் கடந்த 6ம் தேதி அம்பேத்கர் நினைவு நாளில் அம்பேத்கர் புகைப்படத்திற்கு நெற்றியில் விபூதியிட்டும், காவி உடை அணிந்தபடியும் இந்து மத அடையாள சின்னங்களுடன் அம்பேத்கரை சித்தரித்து சுவரொட்டி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி என்பவருக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவுநாள் கடந்த 6ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து கும்பகோணத்தில் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், தொண்டர்கள் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் முன்புறம் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு மலரஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி இரவு இந்து மக்கள் கட்சி தமிழகம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி என்பவர் அம்பேத்கர் நெற்றியில் விபூதியிட்டும், காவி உடை அணிந்தபடியும், காவிய தலைவனின் புகழை போற்றுவோம் என்ற வாசகத்துடன் உருவாக்கப்பட்ட புதிய போஸ்டர் ஒன்றை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டியிருந்தார்.
பல்வேறு வகையில் சர்ச்சைகள் ஏற்படும் நிலையில், இருந்த அந்த போஸ்டரை பார்த்த கும்பகோணம் வட்டார போலிஸார் விடிய விடிய போஸ்டர் ஒட்டி இருந்த பல இடங்களுக்கு சென்று போஸ்டரை கிழித்து அகற்றினர்.
இதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் நிர்வாகிகளும் அன்று காலை அம்பேத்கரை சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டரை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்டனர். தகவலறிந்த கும்பகோணம் டி.எஸ்.பி அசோகன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் போஸ்டர் ஒட்டியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கும்பகோணம் போலிஸாரிடம் போஸ்டர் ஒட்டியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் குருமூர்த்தி அன்றே கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து இன்று சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி என்பவருக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.