செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அ.தி.மு.க சார்பில் 100 அடி உயர கொடிக்கம்பம் ஒன்று உள்ளது. இதனை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க இடைக்கால செயலாளரான எடப்பாடி பழனிசாமி கல்வெட்டை திறந்து வைத்து, கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்த கோடி கம்பத்தில் கட்டப்பட்ட கொடி மழை, புயல் காரணமாக சிக்கிக்கொண்டிருந்தது. இதனால் பழுதடைந்தும் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை நேரம் மதுராந்தகம் அதிமுக நிர்வாகி சரவணன் தலைமையில் கிரேன் மூலம் கொடி கம்பத்தை கீழே இறக்கி பழுது நீக்கும் பணி நடைபெற்றது. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அந்த கொடிக்கம்பம் சரிந்து விழுந்தது.
அப்போது அருகிலிருந்த மதுராந்தகம் சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லப்பா என்பவர் மீது அந்த கொடி கம்பம் தவறி விழுந்துள்ளது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனே வந்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதோடு இந்த சம்பவம் குறித்து இறந்துபோன செல்லப்பாவின் மனைவி ஜெகதாம்பாள், செல்லப்பாவின் இறப்பிற்கு காரணாமாக இருந்த அதிமுகவை சேர்ந்த சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் கோபிநாத் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் கோபிநாத்தின் கவன குறைவு மூலமாகவே இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றம் முன்பு நிறுத்தி அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.