தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக இன்று பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேடையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வாழ்த்து பெற்றார். இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாற்றுக் கட்சி தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
புதிதாக அமைச்சராகப் பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு:-
1. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு.
2. அமைச்சர் இ.பெரியசாமி - கூட்டுறவுத்துறையில் இருந்து ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3. அமைச்சர் சு.முத்துசாமி - கூடுதலாக நகர்ப்பகுதி வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
4. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறையில் இருந்து கூட்டுறவுத்துறைக்கு மாற்றம்.
5. அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் - கூடுதலாகக் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் ஒதுக்கீடு.
6. அமைச்சர் கா.இராமச்சந்திரன் - வனத்துறையில் இருந்து சுற்றுலாத்துறைக்கு மாற்றம்.
7. அமைச்சர் ஆர்.காந்தி - கூடுதலாக பூதானம் மற்றும் கிராம தானம் துறை ஒதுக்கீடு.
8. அமைச்சர் பி.கே. சேகர்பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறையுடன் சேர்த்து கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒதுக்கீடு.
9. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை, திட்டம், மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால நன்மைகள் துறையுடன் கூடுதலாக புள்ளியியல் துறை ஒதுக்கீடு.
10. அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் - சுற்றுச் சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை ஒதுக்கீடு.
11. அமைச்சர் டாக்டர் எம்.மதிவேந்தன் - சுற்றுலாத் துறையிலிருந்து வனத்துறைக்கு மாற்றம்.