தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கன்னிகா பரமேஸ்வரி மகளிர் கல்லூரியில் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு , மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "தி.மு.க என்பது கட்சி அல்ல மக்கள் இயக்கம். பொது மக்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்வது தான் எங்களது வேலை மற்றும் கடமை.
முத்தமிழறிஞர் கலைஞர் பொறுத்தவரைக் கடை கோடி தொண்டனிலிருந்து யாராக இருந்தாலும் ஒரே தராசில் வைத்துத்தான் பார்ப்பார். இளைஞரணி செயலாளராக உதயநிதியை நியமிக்க வேண்டும் என்று அனைவரும் சொன்ன போது அவர் பிரச்சாரம் செய்யட்டும் பார்க்கலாம் என்றார் நம் முதலமைச்சர்.
மாணவர்கள் நீங்கள் தான் புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும். மாணவர்களுக்கு என்றால் அனைத்து வேலையையும் விட்டுவிட்டு உதயநிதி ஸ்டாலின் ஓடோடி வந்துவிடுவார். இளைஞர்களே அடுத்த சமுதாயம் என்று சொல்லும் போது, எங்கள் இளைஞரணி செயலாளரே அடுத்த தமிழ்நாடு என்று எடுத்துக்கூறும் நிகழ்வுதான் இது" என தெரிவித்துள்ளார்.