கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கடைவீதி பகுதியில் 70 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடத்தில் பாத்திமா கவி என்ற 74 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 3 ஆண் மற்றும் 3 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தங்களது குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மூதாட்டி பாத்திமா கவி அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பை போட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது திடீரென அடுக்குமாடிக் குடியிருப்பின் மேற்கூரைகள் சரிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் மூதாட்டி சிக்கிக் கொண்டுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த அரவக்குறிச்சி, கரூர் தீயணைப்புத் துறையினர் 3 பொக்லைன் இயந்திரம், டிராக்டர் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி மூதாட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்திற்குக் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மீட்க பணிகளைத் துரிதப்படுத்தினார்
இதையடுத்து 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மூதாட்டி பாத்திமா கவியை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிறகு அவரது உடலைக் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அரவக்குறிச்சி போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.