சென்னை அடுத்த தாம்பரம் அருகே கெளரிவாக்கத்தில், வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள புளூ ஸ்டோன் என்ற தனியார் நகைக் கடை உள்ளது. இக்கடையின் பொறுப்பாளராக இருப்பவர் ஜகதீசன். இந்நிலையில் இன்று அதிகாலை ஜகதீசன் கைப்பேசிக்குக் கடையிலிருந்து எச்சரிக்கை ஒலி ஒலித்துள்ளது. இதனால் பதற்றம் அடைந்த அவர் உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். பிறகு சேலையூர் போலிஸார் நகைக் கடைக்குச் சென்று பார்த்தனர்.
அப்போது, நகைக் கடை சுவற்றில் இருந்த பைப் லைன் மூலம் கடையின் மேல்தளம் வரை சென்று, அங்கிருந்த மின் தூக்கியின் இணைப்பு அறை வழியாக உள்ளே சென்று பல லட்சம் மதிப்பிலான வைரம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலிஸார் கடையிலிருந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து குற்றவாளிகளை உடனே பிடிக்க அதிரடியாக போலிஸார் களமிறங்கினர்.
மேலும் நகைகளை கொள்ளையடித்த பின் அங்கிருந்து கீழே இறங்க முடியாமல் மேல் தளத்திலிருந்து சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை வெகு நேரமாகக் கொள்ளையன் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு அருகே இருக்கும் கட்டத்தில் குதித்துத் தப்பிச் சென்றது போலிஸாரி விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் அப்பகுதியில் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது கொள்ளையன் ஒருவன் போலிஸாரின் விசாரணைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். பிறகு சிசிடிவி காட்சிகளைக் காண்டு கொள்ளையனை அடையாளம் கண்ட போலிஸார் உடனே கொள்ளையனைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் மூன்று பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து போலிஸார் அந்த கொள்ளையனை அழைத்துக் கொண்டு அவர் தங்கி இருந்த அறைக்குச் சென்றனர். அப்போது அங்குப் பதுங்கி இருந்த மற்ற 2 கொள்ளையர்களையும் போலிஸார் கைது செய்தனர். மேலும் இவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலிஸார் மீட்டனர். மேலும் இந்த கும்பல் இதுபோன்று பேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.