ஆட்சியில் இருந்த போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் எனது கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் இப்போது அரசியலுக்காக இங்கே எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்கிறார் என அமைச்சர் தா.மோ அன்பரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தா.மோ அன்பரசன், " சென்னை புறநகர்ப் பகுதியில் இன்று தண்ணீர் தேங்கி நிற்பதற்குக் காரணம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். 2006 - 2011 ஆம் ஆண்டுகால ஆட்சியில் போரூர் ஏரியிலிருந்து கால்வாய் அமைத்து நீரை வெளியேற்றத் திட்டம் போடப்பட்டுச் செயல்படுத்தினோம்.
நீதிமன்றத்தில் வழக்கு காரணமாக 2016 ஆம் ஆண்டு தீர்ப்பிற்குப் பின் பணி தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது .2016 -2021 ஆம் ஆட்சிக்காலத்தில் நான்கு ஆண்டுகள் இந்த திட்டத்தைச் செயல்படுத்தச் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவி சாய்க்காதது தான் இன்றைய நிலைக்குக் காரணம்.
அ.தி.மு.க ஆட்சியில் 10 ஆண்டுகள் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருந்தால் ஏன் இந்த நிலை இன்று ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண ரூ. 120 கோடி மதிப்பில் வடிகால்வாய்கள் கட்டப்பட்டு வருகிறது.
மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் இப்போது பெரும்பாலான இடங்களில் தண்ணீர் இல்லை. சில இடங்களில் மட்டும் தான் உள்ளது. அதுவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்குத் தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
நீர்நிலைகள் கால்வாயில் குடியிருப்புகள் ஆக்கிரமிப்புகள் இருந்தன அவை தற்போது அகற்றப்பட்டுள்ளது கால்வாயில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் ஊருக்குள் இருக்கும் தண்ணீர் வெளியேறுவதில் சிரமம் உள்ளது. அவற்றை வெளியேற்ற 35 இடங்களில் மொத்தம் 1000 HP மோட்டார்கள் வைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விரைவில் தண்ணீர் வெளியேற்றப்படும்.
இந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்டிருக்கிற கணேசபுரம், திருவள்ளுவர் நகர் போன்ற இடங்களில் அடுத்த ஆண்டிலிருந்து மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்