சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு மாடலிங் துறையில் நுழைவதற்காக வாய்ப்பு தேடி வந்துள்ளார். அப்போது அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில் இங்கிலாந்து நாட்டிற்கு மாடலிங் தேவைப்படுவதாகவும் கூறி, தொடர்பு எண் தீக்ஷா ஜோதி என்று இருந்துள்ளது.
இந்த விளம்பரத்தை நம்பிய அந்த இளம் பெண் தீக்ஷா ஜோதியை தொடர்பு கொண்டு இருக்கிறார். பின்னர் அவர் கேட்டபடி மாடல் மாடலாக உடைகளை அணிந்து அதைப் புகைப்படம் எடுத்து அவருக்கு அனுப்பி இருக்கிறார்.
பின்னர் அரைநிர்வாணமாகவும் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என கேட்டதற்கும் இளம் பெண் மாடலிங் மீதான ஆர்வத்தில் நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளார்.
இதையடுத்து திடீரென அந்த நபர் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும், ரூ.3 லட்சம் பணம் கேட்டு அவரை மிரட்டியுள்ளார். இதனால் பீதியடைந்த அவர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
பிறகு நடந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போது வாட்ஸ் அப் எண்ணை வைத்து சோதனை செய்தபோது அது தமிழகத்தில் உள்ள ஒருவரின் எண் என்பதை போலிஸார் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த வாட்ஸ் அப் எண்ணைப் பயன்படுத்திய ஐ பி முகவரியை வைத்து திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர்தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. பிறகு போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுடன் ஏற்கனவே ரஞ்சித் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்துள்ளார். பிறகு இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த பெண் ரஞ்சித்தை அன்ப்ரண்ட் செய்துள்ளார். இதனால் அவரை பழிவாங்க அவரது மாடலிங் துறை மீதான ஆசையைப் பயன்படுத்தி மிரட்டியது தெரியவந்துள்ளது.
மேலும், ரஞ்சித் சினிமா துறையில் இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்து சில குறும்படங்களை இயக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதேபோன்று மற்ற யாரிடமாவது மோசடி செய்துள்ளாரா என்பது குறித்து போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.