கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யபட்டார். இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர்.
முதல் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டு சோலூர் மட்டம் போலீசார் தொடக்கத்தில் விசாரணை நடத்தினர். அப்போதைய நீலகிரி மாவட்ட எஸ்.பியாக இருந்த முரளி ரம்பா தலைமையில் சோலூர் மட்டம் போலிசார் முறையாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் 2020- ஆம் ஆண்டு தமிழக காவல்துறை நீலகிரி மாவட்ட ADSP கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனி படை போலிஸ் விசாரணைக்கு மாற்றியது. அதன் பின்னர் தனிப்படை போலிஸார் கடந்த ஓராண்டாக ஜெயலலிதாவின் தோழியும் கொடநாடு எஸ்டேட் ஒரு பங்குதாரருமான சசிகலா, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் உட்பட 316 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற்றி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டதால் தனிபடை போலிசாரிடமிருந்து வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவினர் பெற்று கொண்டனர்.
அதனையடுத்து சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி முகமது ஷகில் அக்தர் தாலைமையிலான 10-க்கும் மேற்பட்டோர் நேற்று கொள்ளை நடைபெற்ற கொடநாடு பங்களா மற்றும் கொலை நடந்த இடங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே வழக்கு விசாரணை இன்று (28-10-22) உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால் முதல் முறையாக சிபிசிஐடி போலிசார் விசாரணைக்கு ஆஜராகி தங்களது அடுத்த கட்ட விசாரணை குறித்தும் சிறப்பு புலனாய்வு பிரிவில் இடம் பெற்றுள்ள போலிசாரின் பெயர்கள் அடங்கிய பட்டியலுடன் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.