பண மோசடி செய்ததாக, பாடலாசிரியர் சினேகன் மற்றும் பா.ஜ.க நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தமிழ் திரைப்பட பிரபல பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இந்த நிலையில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி தனது 'சினேகம் அறக்கட்டளை' பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அவரளித்த புகாரில், "‘சினேகம் பவுன்டேசன்’ என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட எனது அறக்கட்டளை 23.12.2015 முதல் நடத்தி வருகிறேன். இந்த அறக்கட்டளையை ஒன்றிய அரசின் வருமான வரித்துறை அங்கீகரித்துள்ளது. சினேகம் பவுன்டேஷன் என்ற பெயரில் பேன்கார்டும் உள்ளது.
ஆனால் எனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலட்சுமி இணையதளம் மூலம் பொதுமக்களிடம் நிதி வசூலித்து வருகிறார்.எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சினேகன் தன் மீது அவதூறு பரப்புவதாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி புகார் அளித்தார். இந்த இரண்டு புகார்களின் படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே நடிகை ஜெயலட்சுமி மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடலாசிரியர் சினேகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சினேகன் புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதால் நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதைதொடர்ந்து உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி பாடலாசிரியர் சினேகன் அறக்கட்டளை பெயரில் பொதுமக்களிடம் நிதி வலுத்தித்து மோசடி செய்ததாக ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.