தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (19-10-2022) அரசினர் தீர்மானத்தினை முன்மொழிந்தும், பல்வேறு உறுப்பினர்கள் உரையாற்றியதற்குப் பிறகு பதிலளித்தும் உரையாற்றினார்.
முதலமைச்சர்:
’18-10-2022 ஆம் நாளன்று பேரவைமுன் வைக்கப்பெற்ற, 22-5-2018 ஆம் நாள் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைவுகள் காரணமாக பொதுச் சொத்துக்கள், தனியார் சொத்துக்கள் ஆகியவற்றிற்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் உள்ளிட்ட பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் விசாரணை ஆணைய அறிக்கையில் அடங்கிய பரிந்துரைகள் மீதும், 17-10-2022 ஆம் நாளிட்ட பொது (மி.க.)-த் துறையின் SSII/320-16/2022 ஆம் எண் அரசாணையில் குறிப்பிடப்பெற்றவாறு அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பெற வேண்டும்’ என்னும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
முதலமைச்சர்: பேரவைத் தலைவர் அவர்களே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை கமிஷன் மூலமாக நீதி விசாரணை நடைபெற்று, அதன் அறிக்கை என்னிடத்திலே கொடுக்கப்பட்டு, நேற்றையதினம் அந்த அறிக்கை சட்டமன்றத்திலே வைக்கப்பட்டு, அதையொட்டி விவாதத்தை நடத்துவதற்காக அரசினர் தீர்மானத்தினை நான் முன்மொழிந்தேன்.
அதைத் தொடர்ந்து இங்கேயிருக்கக்கூடிய உறுப்பினர் பெருமக்கள் தி. வேல்முருகன், ரா. ஈஸ்வரன், ஜவாஹிருல்லா,திரு. சதன் திருமலைக்குமார், இராமச்சந்திரன், சின்னத்துரை, சிந்தனைச்செல்வன், கோ.க. மணி, செல்வப்பெருந்தகை ஆகியோர் தங்களுடைய கருத்துக்களையெல்லாம் இங்கே எடுத்து உரையாற்றியிருக்கிறார்கள். எனவே, நான் இதுகுறித்து அதிகம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் இங்கே வழங்கியிருக்கக்கூடிய கருத்துகள் மட்டுமல்லாமல், நேற்றையதினம் தாக்கல் செய்யப்பட்டிருக்கக்கூடிய அந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையிலே மிக விளக்கமாக எல்லாச் செய்திகளும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதுகுறித்து இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? அதை எப்படி எடுக்க வேண்டும் என்பதை அழுத்தந்திருத்தமாக நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கே தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடானது தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி! அதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. துயரமும், கொடூரமுமான அந்தச் சம்பவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகிறது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், உடனடியாக தூத்துக்குடிக்குச் சென்றேன். துப்பாக்கிச் சூட்டின் சத்தமும், மக்களின் மரண ஓலமும் ஒலித்துக் கொண்டிருந்த காட்சியானது இன்றும் என் மனதை வாட்டிக் கொண்டு இருக்கிறது. இத்தகைய உணர்வோடுதான் இங்கே உரையாற்றியிருக்கக்கூடிய அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய கருத்துகளை இந்த மன்றத்திலே பதிவு செய்திருக்கிறீர்கள்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் அமைதி வழியில் மிகத் தொடர்ச்சியாக பல்லாண்டு காலமாக தூத்துக்குடி மண்ணில் நடந்த போராட்டமாகும். இதை மேலும் வலியுறுத்தக்கூடிய வகையில் கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 22-5-2018 அன்று மாபெரும் ஊர்வலத்தை அந்தப் பகுதி மக்கள் நடத்தினார்கள்.
மாவட்ட ஆட்சியரிடத்திலே மனு கொடுக்கவே அவர்கள் இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்தப் பிரச்னையை அன்றைய அ.தி.மு.க. அரசு சரியாகக் கையாளவில்லை. ஊர்வலமாக வரக்கூடிய மக்களை அழைத்துப் பேசவில்லை. அவர்களிடம் மனுக்களைப் பெற்று கருத்துகளைக் கேட்டறிய அன்றைக்கு அந்த அரசு தயாராக இல்லை.
இதுமட்டுமல்லாமல், ஊர்வலமாக வந்த மக்கள்மீது அதிகாரத்தை அத்துமீறிப் பயன்படுத்தி கலைப்பதற்கு திட்டமிட்டார்கள். துப்பாக்கிச் சூடும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதி செய்து அறிக்கை கொடுத்திருக்கிறது. அந்தச் சம்பவத்திலே 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் துள்ளத்துடிக்க பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தார்கள். 64 பேர் சிறிய அளவிலான காயங்களை அடைந்தார்கள்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் அன்றைய முதலமைச்சர் பழனிசாமியின் எதேச்சதிகார நினைப்புக்கு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. அதாவது, அ.தி.மு.க. ஆட்சியின் ஆணவத்துக்கு தூத்துக்குடியில் இத்தனை உயிர்கள் பலியானது. கேட்பவர் அனைவருக்கும் இரத்தம் உறைய வைக்கக்கூடிய இந்தச் சம்பவம் குறித்து, அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடம் ஊடகங்கள் கேட்டபோது, 'இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியாது; உங்களைப் போல நானும் டி.வி. பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்' என்று பேட்டி அளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
‘உள்துறையை கையில் வைத்திருந்த இந்த நாட்டினுடைய முதலமைச்சர் பேசும் பேச்சா இது?’ என்று நாடே கோபத்தால் கொந்தளித்தது. அந்தளவுக்கு மிகப் பெரிய, உண்மைக்கு மாறான தகவலை தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர் அன்றைக்குப் பேசியிருக்கிறார். இந்தக் கருத்தைச் சொன்னார். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். 'கடப்பாறையை முழுங்கிட்டு கசாயம் குடிச்சிடுவான்' என்று. அந்தளவுக்கு மிகப் பெரிய, உண்மைக்கு மாறான தகவலை அவர் அன்றையதினம் சொல்லியிருக்கிறார்.
அப்படி அவர் சொன்னது மிகப் பெரிய தவறு என்று, அவர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே சொல்லி விட்டது. அந்த ஆணையம் நம்மால் அமைக்கப்பட்டது அல்ல. அவர்கள் அமைத்த ஆணையம்தான்.
ஒருவேளை அதை நாம் அமைத்திருந்தால், இதில் அரசியல் இருக்கிறது என்றுகூட சொல்லியிருக்கலாம். ஆனால், அவர்கள் அமைத்த ஆணையமே சொல்லியிருக்கிறது. நேற்றைக்கு தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அறிக்கைகளுமே, அவர்கள் அமைத்த ஆணையங்களால் அளிக்கப்பட்ட அறிக்கைகளாகும். நாம் வந்து எந்த ஆணையமும் இதற்காக அமைக்கவில்லை.
நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் பக்கம் 252-ல் இது அம்பலம் ஆகி இருக்கிறது. ''தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'அந்தச் சம்பவத்தை மற்றவர்களைப் போல ஊடகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்து கொண்டேன்' என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியும் அளித்திருக்கிறார்.
ஆனால் இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன், அப்போதைய உளவுத் துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள்.
எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் அந்தச் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாக அவர் கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும். இது ஆணையத்தின் அறிக்கையில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே, இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது.
கொடூரமான கொலைவெறித் தாக்குதல் தொடர்பாக நேரடி வர்ணனைகளை தனது அறையில் உட்கார்ந்து கேட்டுவிட்டு, வெளியில் வந்து ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று சொன்னவர்தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த பழனிசாமி. அவரது துரோகங்களும், தவறுகளும் அவரது அரசியல் வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். புதிதாக நாம் எதையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால் நான் இதற்கு மேல் எதையும் சொல்ல விரும்பவில்லை. இதற்கான தண்டனையின் தொடக்கத்தைத்தான் தேர்தல் தோல்வி மூலமாக அ.தி.மு.க.-வுக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள்.