கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக ஹோட்டல்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்க வேண்டும் என ஹோட்டல் நிர்வாகத்திற்குத் தொடர்ச்சியாக வலியுறுத்தி எச்சரிக்கை செய்தும் வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் உணவில் காது குடையும் பஞ்சு, புழு, பல்லி இருக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில், சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபலமான ஹோட்டலில் சட்னியில் பல்லி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கான பட்டய பயிற்சி சிவகங்கையில் நடைபெற்று வருகிறது. இதற்கு வருகை தந்த கவுன்சிலர் ஒருவர் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் உணவு சாப்பிடச் சென்றுள்ளார்.
அப்போது அவருக்குப் பரிமாறப்பட்ட சட்னியில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து உணவக உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார். அப்போது அவர் சரியாகப் பதில் அளிக்கவில்லை.
இதனால் சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டலில் வந்து சோதனை செய்து கடையை மூட உத்தரவிட்டனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.