திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்து கீழ்நேத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் - காமாட்சி தம்பதியினர். இருவரும் தங்கள் மகனுடன் தனியே வாழ்ந்து வந்த நிலையில், காமாட்சி விறகு அடுப்பில் சமைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த போது அவர் அணிந்திருந்த சேலையில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. இதில் சேலை முழுவதும் தீப்பற்றியதில் அவரது உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து காமாட்சியின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், செயலியில் இருந்த தீயை அணைத்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
செய்யாறு அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த காமாட்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் காமாட்சியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.