தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா மணப்பத்தூரை சேர்ந்தவா் செல்வநாயகி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டு வேலை செய்வதற்காக, பக்ரைன் நாட்டிற்கு சென்றார். தன்னுடைய குடும்பத்தின் வறுமை காரணமாக தொடர்ந்து அங்கேயே, பணியாற்றிக் கொண்டிருந்தாா்.
இந்த நிலையில் செல்வநாயகிக்கு திடீரென உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது. உயர் ரத்த அழுத்தத்தினால், மூளைக்கு செல்லும் நரம்புகள் அடைப்பட்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாா். இதனால் பக்ரைனில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்பு செல்வநாயகி உடல்நிலை ஓரளவு முன்னேற்றம் அடைந்தது. ஆனாலும் அவரை சொந்த நாடான இந்தியாவிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
செல்வநாயகியால்,எழும்பி நிற்கவோ, உட்காரவோ முடியாததால், அவரை விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியா்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்,தமிழ்மன்றத்தினா், பொதுநல அமைப்புகள், செல்வநாயகி தமிழ்நாட்டுக்கு அனுப்புவதில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.ஆனாலும் விமானத்தில் படுக்கை வசதியுடன் அனுப்ப அதிகமான தொகை தேவைப்பட்டது.
இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் உள்ள தமிழ் மன்றத்தினா், அங்குள்ள பத்திரிகைகளில் செய்திகள் வெளியிட்டு, அதன் மூலம் நிதி திரட்டினா்.அதோடு இந்திய அரசு,தமிழக அரசின் உதவிகளையும் கேட்டனா்.இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகளும் முயற்சிகள் மேற்கொண்டனா்.
அதன்பின்பு,பக்ரைனிலிருந்து கல்ப் ஏா்வேஸ் விமானத்தில்,ஸ்ட்ரெச்சா் பயணியாக செல்வநாயகியை நேற்று இரவு சென்னை வந்த விமானத்தில்,சென்னைக்கு அனுப்பி வைத்தனா். சென்னை விமான நிலையத்தில் செல்வநாயகியை, தமிழக அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை அதிகாரிகள் மற்றும், தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் சேர்ந்தவர்கள் வரவேற்றனர்.அதோடு செல்வநாயகியொ,அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதியும் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டிருந்தது. அந்த ஆம்புலன்ஸ் வண்டியில் செல்வநாயகி, அரியலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.