காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சு பேட்டை பெரிய தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி மகேஸ்வரி. இவரது மகன் ஜெகன். இவர் தனது நண்பர்கள் வைத்திருக்கும் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் போல் தனக்கும் வேண்டும் என பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனால் தாய் மகேஸ்வரி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ. 2. 1/4 லட்சம் கொடுத்து காஞ்சிபுரம் - பொன்னேரிகரை செல்லும் வழியில் அமைந்துள்ள ஷோரூமில் ஒன்றில் பைனான்ஸ் KTM பைக்கை வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த பைக் வாங்கிய மூன்றாவது மாதத்திலேயே வாகனத்தின் சாக்கப் ஜார் பழுதாகியுள்ளது. இது குறித்து ஷோரூம் நிர்வாகத்திடம் மகேஸ்வரி முறையிட்டுள்ளார். அப்போது ரூ.8 ஆயிரம் கட்டினால் சரிசெய்து தரப்படும் என கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் வாகனம் வாங்கி 3 மாதங்களிலேயே பழுதாகிவிட்டது. இப்படி இருக்க எப்படி எங்களால் ரூ.8 ஆயிரம் கொடுக்க முடியும் என கூறியுள்ளார். பின்னர் வாகனம் பழுது பார்க்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் நான்கு மாதம் கழித்து தாயும் மகனும் ஏனாத்தூர் பகுதி வழியே சென்று இரு சக்கர வாகனத்தில் சென்றபோது திடீரென வாகனத்தின் இரண்டு வீல்களும் உடைந்துள்ளது. இதைப்பார்த்து தாய் மற்றும் மகன் இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து வாகனத்தைப் பழுது பார்த்துத் தரும்படி ஷோரூம் நிர்வாகத்திடம் கூறியபோது அவர்கள் மறுத்துள்ளனர். இதனால் ரூ. 2 லட்சம் கொடுத்து வாங்கிய வாகனம் 8 மாதத்தில் பழுதாகியுள்ளதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மகனும், தாயும் தவித்து வருகின்றனர்.