சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இதுவரை 2-ம் கட்ட கலந்தாய்வுகள் நடைபெற்று, மாணவர்கள் அதிகளவு தனியார் கல்லூரிகளை தேர்வு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 3-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 13-ம் தேதி தொடங்க உள்ளது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, "'பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் மாத இறுதியில் வகுப்புகள் தொடங்கும். பொறியியல் 3 ஆம் கட்டக் கலந்தாய்வு அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கும்.
12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம். கல்லூரிகளில் மீதமுள்ள காலி இடங்களில், இவர்கள் சேர்ந்து படிக்கலாம். அதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இதுகுறித்து விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.
மாநில கல்விக் கொள்கை குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்ய ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவு தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பொறியியல் கலந்தாய்வு மற்றும் வகுப்புகள் தொடங்கத் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. 2-ம் சுற்றில் கலந்துகொள்ள 31 ஆயிரத்து 94 மாணவர்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தனர். அதில் 23 ஆயிரத்து 458 மாணவர்கள் விருப்பப் பாடம் மற்றும் கல்லூரிகளைப் பதிவு செய்துள்ளனர். 14 ஆயிரத்து 153 பேர் கல்லூரிக்குச் சென்று சேர வேண்டிய மாணவர்கள் ஆவர்.
பொறியியல் கலந்தாய்வில் கல்லூரியைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள் வரும் 19-ம் தேதிக்குள் கல்விக்கட்டணத்தை செலுத்த வேண்டும். பொறியியல் சேவை மையங்களுக்குச் சென்று சேர வேண்டியவர்கள் 5 ஆயிரத்து 16 பேர். மேல்நோக்கிய நகர்வுக்காகக் காத்திருப்பவர்கள் 4 ஆயிரத்து 289 மாணவர்கள் ஆவர். 3-வது கட்டக் கலந்தாய்வு அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்கும். பொறியியல் கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெறும்.
B Arch மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியிடப்படும். 8 ஆம் தேதி முதல் அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். 4 கட்டக் கலந்தாய்வுகள் நிறைவு பெற்றதும் அக்டோபர் மாத இறுதியில், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்'' என்று தெரிவித்தார்.