கடந்த சில மாதங்களுக்கு முன்பு தம்பதியினர் ஒருவர் தங்களுக்கு விவகாரத்துக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அப்போது இவர்களுக்கு விவாகரத்து கிடைத்துவிட்டது. இருப்பினும் குழந்தை தாயிடம் வளர வேண்டும் என்று தீர்ப்பு வந்ததால் குழந்தையின் தந்தை, குழந்தையை காண சிரமம்பட்டார். இதனிடையே விவாகரத்து பெற்ற பின்னர், தாய் தனது குழந்தையை கூட்டிக்கொண்டு ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதிக்கு சென்று விட்டார்.
இதனால் முன்னாள் கணவன் தனது குழந்தையை காண வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த ஜூலை மாதம் தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, "குழந்தைக்கு தாய் - தந்தையின் பாசம் கிடைக்க வேண்டும். எனவே முன்னாள் மனைவி, சென்னையில் தங்கியிருந்து, கணவன் குழந்தையை சந்திக்க அனுமதிக்க வேண்டும்.
மேலும் விவாகரத்து மூலம் பிரிந்தவர்கள் தங்களை கணவன் - மனைவியாக கருதாமல், ஒரு விருந்தினர்போல் நினைத்து குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர், தின்பண்டம் கொடுத்து உபசரிக்க வேண்டும். அவர் குழந்தையுடன் நெருக்கமாக இருக்க வைக்க வேண்டும் " என்று உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் மனைவி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குருகிராமில் பணியாற்றும் மனுதாரரால் சென்னைக்கு வர முடியாது என்றும், குழந்தையை காண உரிமை கோரிய வழக்கில், குழந்தையை காண வரும் முன்னாள் கணவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தனி நீதிபதி போதனை செய்ய முடியாது என்றும் வாதிடப்பட்டது.
இவர்கள் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு டீ வழங்கி உபசரிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை தனது அதிகார வரம்பை மீறி பிறப்பித்துள்ளார். எனவே அது ரத்து செய்யப்படுகிறது. மேலும் முன்னாள் கணவர் குழந்தையை காண விரும்பினால், முன்கூட்டி தகவல் தெரிவித்து குருகிராம் சென்று சந்திக்கலாம்" என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.