தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட கூலத்தேவர் முக்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (36). தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு கனிமொழி என்ற பெண்ணின் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற பிரகாஷ் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனவும், உறவினர்கள் - நண்பர்கள் பல்வேறு இடங்களில் தேடி கிடைக்காததால் கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் பிரகாஷின் செல்ஃபோன் எண்களை ஆய்வு செய்த போலிஸார், சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத் குமார் அவரது மனைவி நித்யா ஆகியோரிடம் போலிஸார் விசாரணை செய்தனர்.
விசாரணையில், காதல் விவகாரம் காரணமாக பிரகாஷை கொலை செய்து முல்லைப் ஆற்றில் வீசியதாக தம்பதியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வினோத்குமார் நித்யா மற்றும் அவர்களுக்கு உதவிய கம்பம் பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் உத்தமபாளையம் - அனுமந்தன்பட்டி புறவழிச்சாலையில் செல்லக்கூடிய முல்லைப் பெரியாற்றில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், பிரகாஷின் சடலத்தை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.