தருமபுரி ரயில் நிலையம் அருகே மணி என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த செவ்வாயன்று ஒருவர் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது அந்த நபர் தான் வைத்திருந்த பையை மறந்து டீ கடையிலேயே விட்டு விட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து சிறிது நேரம் கழித்து தனியாக இருந்த பையை மணி பார்த்துள்ளார். இதற்கு யாரும் உரிமை கோராததால் டீ குடிக்க வந்தவர்கள் யாராவது தவறுதலாக விட்டுவிட்டுச் சென்றிருப்பார்கள் வந்து வாங்கிக் கொள்வார்கள் என அந்த பையை எடுத்துப் பத்திரப்படுத்தியுள்ளார்.
ஆனால் யாரும் பையைத் தேடி வரவில்லை. இதனால் மணி பையைத் திறந்துபார்த்துள்ளார். அதில் நகை பெட்டி இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் உடனே அந்த நகையை அருகே இருந்த காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் நவாஸிடம் ஒப்படைத்துள்ளார். அந்த நகை 11 சவரனாகும்.
இதையடுத்து பையைத் தொலைத்தவர் டீ கடைக்கு வந்து தனது பையைக் காணவில்லை என கூறியுள்ளார். பின்னர் உங்கள் பையைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளேன் என கூறி அவரை மணி அங்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், போலிஸாரிடம் உரிய ஆவணங்கள் காண்பித்ததை அடுத்து அந்த நபரிடம் 11 சவரன் நகையைக் காவல் ஆய்வாளர் நவாஸ் ஒப்படைத்தார். இதையடுத்து நேர்மையுடன் நடந்து கொண்ட டீ கடைக்காரர் மணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர்.