யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ஆம் தேதி யூடியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது” என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
அப்போது சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது? என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது தன் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக கூறப்படும் வீடியோ பதிவு அல்லது அதற்கான தட்டச்சு பதிவை வழங்க வேண்டும் என சவுக்கு சங்கர் கோரியிருந்தார்.
மேலும் 6 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டிருந்தார். இதனை தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு வீடியோ பதிவின் நகல்களை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நீதிமன்றத்தின் மீது எந்தவித நம்பிக்கை இல்லையென்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளதாக பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஒரு வார காலத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்றது. அப்போது சவுக்கு சங்கரும் ஆஜராகியிருந்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை முடிவுற்றதும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து யூட்யூபர் சவுக்கு சங்கர் மீதான இந்த குற்றவியல் நீதிமன்ற அவ மதிப்பு நடவடிக்கை வழக்கில், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.