தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.9.2022) கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்லத் திருமண விழாவில் ஆற்றிய உரை:-
நம்முடைய முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி அவர்களுடைய அருமை பேத்தி, இளைஞர் அணியினுடைய மாநில துணை அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தம்பி பைந்தமிழ்ப் பாரி அவர்களுடைய அன்பு மகள் ஸ்ரீநிதி அவர்களுக்கும் – கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த பர்கூர் தொகுதியினுடைய சட்டப்பேரவை உறுப்பினர் திரு. மதியழகன்-திருமதி விஜயா ஆகியோருடைய அன்பு மகன் கௌசிக் தேவ் அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.
இந்த இனியதொரு மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பு ஏற்று மணவிழாவை நடத்திவைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
வரவேற்புரையாற்றிய நம்முடைய பொங்கலூர் பழனிசாமி அவர்கள் உரையாற்றுகிற நேரத்தில் குறிப்பிட்டுச் சொன்னார், 1972ஆம் ஆண்டு அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்னால் அவருடைய திருமணத்தை நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தி வைத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, நம்முடைய பொங்கலூர் பழனிசாமி அவர்களின் அருமை மகன் பைந்தமிழ்ப் பாரி அவர்களுக்கும் 1999ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைக்கு நம்மிடத்தில் இருந்திருந்தால், இந்தத் திருமணத்திற்கும் அவர்தான் தலைமையேற்று நடத்தி வைத்திருப்பார். அவர் நம்மையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்ட காரணத்தால், இன்றைக்கு அவரிடத்திலிருந்து, அவருடைய மகனாக இருக்கக்கூடிய இந்த ஸ்டாலின் இந்தத் திருமணத்திற்கு வருகை தந்து, தலைமை ஏற்று நடத்தி வைக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.
எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் அந்தக் குடும்பத்திலே வாரிசு, வாரிசாக இருக்கக்கூடிய அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்களோ, அதேபோல் எனக்கும் ஒரு வாய்ப்பு எனக்கும் கிடைக்கும், நிச்சயமாக உருவாகும், அப்படிப்பட்ட திருமணத்திற்கு நான் வருவேன், அந்தத் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.
நம்முடைய பொங்கலூர் பழனிசாமி அவர்களைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், அவர் 1972ஆம் ஆண்டு தன்னுடைய திருமணத்தை நடத்திக் கொண்ட நேரத்தில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, மீண்டும் கழகம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பை ஏற்று பணியாற்றியிருக்கிறார்.
அதேபோல், இந்த மாவட்டத்தினுடைய பொறுப்பாளராக, மாவட்டத்தினுடைய செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றியிருக்கிறார். அதிலும் குறிப்பாக, கழகத்திற்கு ஒரு மிகப் பெரிய சோதனை வந்த நேரத்தில், இந்த மாவட்டத்தினுடைய பொறுப்பேற்று பணியாற்றி, இந்த மாவட்டத்தில் கழகத்தை கம்பீரமாக நிலைநிறுத்திய பெருமை நம்முடைய பொங்கலூர் பழனிசாமி அவர்களுக்கு உண்டு. ஆக, அப்படிப்பட்டவருடைய இல்லத்தில், அவருடைய அருமை பேத்திக்கு நடக்கக்கூடிய இந்தத் திருமணத்தில் நாமெல்லாம் பெருமையோடு பங்கேற்க வந்திருக்கிறோம்.
அதேபோல், நம்முடைய மதியழகன் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்றைக்கு பர்கூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு நம்முடைய இயக்கத்தில் வந்து சேர்ந்தவர். திரு. ரஜினிகாந்த் அவர்களுடைய மன்றத்தில், அந்த அமைப்பில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்தவர்.
ஒரு நாள், என்னை வந்து இல்லத்தில் சந்தித்து, நான் இந்த இயக்கத்தில் சேரப் போகிறேன், சேர வேண்டும், அதற்கு நீங்கள் அனுமதி தரவேண்டும் என்று கேட்ட நேரத்தில், நானும் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய நம்முடைய கழக நிர்வாகிகளோடு கலந்துபேசி அதற்குப் பிறகு சொல்கிறேன் என்று சொல்லி, அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடியவர்களிடத்தில் விசாரித்த நேரத்தில், அவர் வந்தால் நிச்சயமாக நாம் சேர்த்துக் கொள்வோம், அவருக்கு ஒரு மிகப்பெரிய செல்வாக்கு இந்தப் பகுதியில் இருக்கிறது, நல்ல உழைப்பாளி, எல்லோரிடத்திலும் சிறப்போடு, அன்போடு, பாசத்தோடு பழகக்கூடியவர். அவர் வந்தால் கழகத்திற்கு ஒரு நல்வரவாக, கழகத்திற்கு மேலும் வலு சேர்க்கக்கூடிய வகையில் நிச்சயம் அமையும் என்று எல்லோரும் எடுத்துச் சொன்னார்கள்.
அவைகள் எல்லாம் பொய்யாக இல்லை, அது உண்மையாக இருக்கிறது. அந்த வகையில் நம்முடைய மதியழகன் அவர்கள் இயக்கத்தில் சேர்ந்து, மிகச் சிறப்பாக பணியாற்றி, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அவரும் ஒரு துணையாக இருந்த பணியாற்றியிருக்கிறார், பாடுபட்டிருக்கிறார், துணை நின்றிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கிறபோது, நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.
அதற்குப் பின்னால், பர்கூர் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக நின்று அதிலும் அவர் வெற்றி பெற்று, இன்றைக்கு அந்தத் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, மிகச் சிறப்பாக அந்தத் தொகுதி மக்களின் உள்ளத்திலே அவர்களுக்கு இருக்கக்கூடிய பல்வேறு பணிகளையெல்லாம் சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
அவர் ஒவ்வொரு முறையும் சட்டமன்றத்தில் உரையாற்றுகின்ற அந்த பாணியை நான் கூர்ந்து கவனித்ததுண்டு. ஆக, அவர் உரையாற்றுகிறபோது, தொகுதி மக்களுடைய பிரச்சனைகள், அதேபோல் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், ஒட்டுமொத்தமாக அனைத்தையும் தெளிவாக, விளக்கமாக, விரிவாக அந்த அவையில் எடுத்துவைத்து வாதிடுகிற அந்தப் பாணியையெல்லாம் பார்க்கிறபோது, நிச்சயமாக அவரைச் சேர்த்ததில் எந்தத் தவறும் இல்லை, அவரைச் சேர்த்ததில் இந்த இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய பெருமை வந்து சேர்ந்திருக்கிறது.
ஆக, அப்படிப்பட்ட ஒரு சிறப்பான செயல் வீரராக இருக்கக்கூடிய நம்முடைய மதியழகன் அவர்களுடைய அருமை மகன் கௌசிக் தேவ் அவர்கள் இன்றைக்கு நம்முடைய பழனிசாமி அவர்கள் இல்லத்தில் அவருடைய பேத்திக்கு இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் நம்முடைய பைந்தமிழ்ப் பாரியினுடைய மகளை கரம் பிடித்து இன்றைக்கு அவர்கள் வாழ்க்கை ஒப்பந்தம் செய்துகொண்டு இல்லறத்தில் அவர்கள் ஈடுபட இருக்கிறார்கள்.
நடைபெற்றிருக்கக்கூடிய இந்தத் திருமணத்தைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், இது ஒரு சீர்திருத்தத் திருமணமாக நடந்தேறி இருக்கிறது. சீர்திருத்தத் திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணமாக நடந்தேறி இருக்கிறது. இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டுமென்றால், தமிழ்த் திருமணமாக, அந்தத் தமிழுக்கு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் செம்மொழி என்கிற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தாரே அப்படிப்பட்ட அங்கீகாரத்தைப் பெற்றிருக்கக்கூடிய அந்த தமிழ்மொழியில் இந்தத் திருமணம் நடந்தேறி இருக்கிறது.
இதுபோன்ற திருமணங்கள், இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால், அந்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற அங்கீகாரத்தை அன்றைக்கு நாம் பெற்றிருக்கவில்லை. ஆனால், 1967-ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்று, முதலமைச்சராக அறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்திற்குள்ளே நுழைந்து முதல் தீர்மானமாக அவர் கொண்டுவந்து நிறைவேற்றித் தந்த தீர்மானம்தான் சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற அங்கீகாரத்தை நமக்குப் பெற்றுத் தந்தார்கள். ஆகவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்தத் திருமணம், இந்த சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்கிற அங்கீகாரத்தோடு நடந்தேறி இருக்கிறது.
அதேநேரத்தில், நான் இங்கே தெரிவிக்க விரும்புவது, இன்றைக்குத் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி ஆறாவது முறையாக பொறுப்பேற்று, நம்முடைய கழகம் மிகச் சிறப்பான வகையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை மக்களிடத்தில் நாம் எடுத்துச் சொல்லியிருக்கிறோமோ, தேர்தல் அறிக்கையில் என்னென்ன குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறோமோ அத்தனையும் நிறைவேறிவிட்டது என்று சொல்லி நான் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால் நிச்சயமாக, உறுதியாக ஒரு 70 சதவீதம் அதில் நிறைவேறியிருக்கிறது. மீதம் இருக்கக்கூடிய 30 சதவீதமும் விரைவிலே நிறைவேற்றுவோம், அதை நிறைவேற்றிக் காட்டுவோம் என்று எல்லோருக்கும், உங்களுக்கும் நன்றாகத் தெரியும். அதை இன்றைக்கு மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
இதை நான் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம், நான்கு நாட்களுக்கு முன்னால்தான் நான் கோயம்புத்தூருக்கு வந்தேன். விமான நிலையத்திலிருந்து அரசினர் விடுதிக்கு செல்கிற வரையில் அதுவும் இரவு 8.00 மணியளவில் புறப்பட்டு, அந்த விடுதிக்கு செல்ல வேண்டுமென்றால் 10 நிமிடங்கள், 15 நிமிடங்களில் சென்றுவிடலாம். ஆனால், மக்கள் தந்த வரவேற்பை நான் பெற்றுக்கொண்டு சென்ற காரணத்தால் நான் சென்று சேருவதற்கு ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஆயிற்று. போகிற வழியெல்லாம் சாலை இருமருங்கிலும் பெண்கள், ஆண்கள், முதியவர்கள், இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள் என எல்லா தரப்பு மக்களும் இருமருங்கிலும் நின்றுகொண்டு என்னை வாழ்த்தி, வாழ்க! வாழ்க! என்று கோஷமிட்டு, அதே நேரத்தில் ஆங்காங்கு ஒருசிலர் மனுக்களையும் கொடுத்து, எப்போதும் சிலர் மனுக்களை கொடுக்கும்போது சிறிது ஏக்கத்தோடு, சிறிது வருத்தத்தோடு கொடுக்கிற பாணியைத்தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னிடத்தில் மனுக்களை கொடுக்கிறபோது, மகிழ்ச்சியோடு, பூரிப்போடு, நம்பிக்கையோடு அதுவும் கொடுத்துவிட்டு, முடிந்துவிட்ட மாதிரி நன்றி! நன்றி! என்கிறார்கள், மனு கொடுத்தவுடன், இது முடிந்துவிடும் என்கிற நம்பிக்கை இன்றைக்கு மக்களிடத்தில் வந்திருக்கிறது என்றால், அதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் ஒரு பயணத்தை நான் நடத்தினேன். அந்த பயணத்தை நடத்தியபோது ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்கயெல்லாம் நேரடியாக வந்து மனுக்களைக் கொடுக்கலாம், மேடையில் ஒரு பெட்டி வைத்திருக்கிறோம், அந்தப் பெட்டியில் அந்த மனுக்கள் எல்லாம் போடப்படும், நேரடியாக வந்து மனுக்களைக்கூட போட வேண்டிய அவசியமில்லை, வருகிற நுழைவாயிலில் கிட்டத்தட்ட நூறு இளைஞர்கள் நாற்காலி, மேசை போட்டு, பதிவு செய்து அதற்கு விவரங்களையெல்லாம் பெற்றுக்கொண்டு அதற்குப் பிறகு அந்தப் பெட்டிக்கு வந்து சேர்ந்தது. அந்தப் பெட்டியை அந்த மக்களுக்கு முன்னாலேயே அதைப் பூட்டி, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள்ளாக இவைகளையெல்லாம் தீர்த்து வைக்கிற முயற்சியில் நான் ஈடுபடுவேன் என்று உறுதி தந்தேன்.
நாம் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்தவுடன் அந்தப் பெட்டிகளெல்லாம் கோட்டைக்கு வந்தது. அதற்கென்று ஒரு துறை உருவாக்கப்பட்டது, அதற்காக, இந்திய ஆட்சிப் பணி நிலையில் இருக்கக்கூடிய ஒரு அதிகாரி நியமிக்கப்படுகிறார், ஒரு குழு நியமிக்கப்படுகிறது. அவைகளெல்லாம் பிரித்து பார்க்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு ஆராய்ந்து எந்தெந்தப் பணிகளெல்லாம் உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, ஆக, அப்படி வழங்கப்பட்டிருக்கக்கூடிய மனுக்களில் 70 சதவீதம் அத்தனையும் நிறைவேற்றித் தரப்பட்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு குறிப்பிட்டுச் சொல்கிறேன். அதற்கு என்று ஒரு இலாகா, அதற்கு என்று ஒரு அதிகாரி, ஒரு Control Room வைத்திருக்கிறோம். நான் அடிக்கடி அந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்வது உண்டு. எவ்வளவு மனுக்கள் வந்திருக்கிறது? எவ்வளவு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது? எவ்வளவு மனுக்கள் என்ன பிரச்சனையில் இருக்கிறது? என்ன நிலையில் இருக்கிறது? ஏன் தீர்வு காணப்படவில்லை? என்ன காரணம்? என்பதைப் பற்றியெல்லாம் 15 நாட்களுக்கு ஒருமுறை அங்கே சென்று ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறேன்.
கடந்த வாரம் ஆய்வு நடத்துவதற்காகச் சென்றிருந்தேன். அங்கு 200 பேர் பணியாளர்கள் அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மனுதாரர்களின் கோரிக்கை பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதா என்று கேட்கிறார்கள். அதற்குப் பிறகு மனுதாரர்களும் அவர்களை தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். நான் ஒரு நான்கைந்து நபர்களிடம் தொலைபேசியில் பேசினேன். கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டவர்களிடத்தில் நான் பேசினேன். அவர்கள் நன்றி சொன்னார்கள், மகிழ்ச்சி என்று சொன்னார்கள். அப்போது ஒரு தோழரிடம் பேசுகின்ற போது கடந்த காலங்களில் இப்பிரச்சனைக்காக பத்து ஆண்டுகளாக அலைந்தேன், ஒன்றும் நடக்கவில்லை. உங்கள் ஆட்சி வந்தபிறகு பத்தே நாட்களில் நான் நினைத்த காரியம் முடிந்துவிட்டது. மகிழ்ச்சி, மிகவும் நன்றி மிகவும் நன்றி. முதலமைச்சராக இருக்கக்கூடிய நீங்களே பேசுவீர்கள் என்று எதிர்பாக்கவில்லை என்று சொல்லி பூரிப்போடு பேசினார். அது குறித்து அடுத்த நாள் தொலைக்காட்சியில் அவரிடத்தில் ஒரு சிறப்புப் பேட்டி எடுக்கிறார்கள். அதை நானும் உட்கார்ந்து பார்த்தேன். அவர் அந்த சம்பவத்தைச் சொல்கிறார். இந்த தேதியில் முதலமைச்சர் என்னிடத்தில் தொலைபேசியில் பேசினார். பத்து வருடமாக முடியாத ஒரு காரியத்தை, பத்து நாட்களில் முடிந்துவிட்டது. அதை முடிந்துவிட்டதா என்பதை முதலமைச்சரே என்னிடத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டார் என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார். இதையெல்லாம் சொல்லிவிட்டு இன்னொன்று சொல்கிறார், இன்னொரு விஷயம், நான் அவரிடமும் சொல்லவில்லை, சொன்னால் அவரே ஆச்சரியப்பட்டிருப்பார், நான் அவரோடு பிரசிடென்சி கல்லூரியில் ஒன்றாகப் படித்தேன், நான் அவருடைய classmate என்றார். அப்போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
இப்படி பல சம்பவங்கள். எதற்காக சொல்கிறேன் என்றால், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அரசியல் நோக்கத்தோடு அல்ல, இப்போது கூட ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம் 234 தொகுதிகளில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த தொகுதியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை முதலமைச்சர் அலுவலகத்திற்கு நீங்கள் தெரிவித்தால், அதையும் தீர்த்து வைக்கிறோம் என்று ஒரு உறுதிமொழி கொடுத்து, அது எடப்பாடி தொகுதியாக இருந்தாலும், அந்த பிரச்சனையை தீர்த்துவைப்போம் என்று சொல்லியிருக்கிறோம். இதுதான் திமுக, இதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஆக, இப்படிப்பட்ட நிலையில் இந்த ஆட்சி சென்று கொண்டிருக்கிறது.
தேர்தல் நேரத்தில் தந்த உறுதிமொழி இன்னொன்றும் உண்டு. அதில் முக்கியமானது என்னவென்று கேட்டால்,
முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவினுடைய மறைவு. அது ஒரு suspense என்று நாங்கள் சொல்லவில்லை. அவர்களுடைய கட்சிக்குள்ளேயே சொன்னது. அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவர், அதற்குப் பிறகு துணை முதலமைச்சராக இருந்தவர், அந்தக் கட்சியில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கக்கூடியவர், அம்மையார் எப்பொழுதெல்லாம் அந்தப் பதவியிலிருந்து விலகுகின்றார்களோ, நீக்கி வைக்கிறார்களோ, நீதிமன்ற தீர்ப்பு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் முதலமைச்சராக இருந்து பணியாற்றியவர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள். அவர்களுக்குள்ளே ஏற்பட்ட பிரச்சனையில் அவர் கோபத்தோடு, ஆத்திரத்தோடு, அந்த அம்மையாருடைய நினைவிடத்திற்குச் சென்று உட்கார்ந்துகொண்டு ஆவியுடன் பேசுகிறேன், என்று உட்கார்ந்தார். அங்கே போய் தியானம் செய்தார். நீதி கேட்டார். ஆக, இப்படியெல்லாம் நடந்தது, உங்களுக்கெல்லாம் தெரியும். அந்த அம்மையாருடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று அவரே சொன்னார். அவரை சரிசெய்ய வேண்டும் என்பதற்காக, ஒரு ஒப்புக்காக, ஒரு கமிஷன், அன்றைக்கு இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் தலைமையிலே ஒரு கமிஷன் அமைந்தது. ஆக, அந்த கமிஷன் எவ்வளவு வருஷம் நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். சும்மா ஒப்புக்காக நடந்து கொண்டிருந்தது. அதற்குப்பிறகு, அந்த நேரத்தில் நாங்கள் சொன்னோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அந்த கமிஷனை முறையாக நடத்தி, முறையான அறிக்கையைப் பெற்று, முறையாக நடவடிக்கை இந்த ஆட்சி எடுக்கும் என்று உறுதிமொழி கொடுத்தோம். ஐந்தாறு நாட்களுக்கு முன்னால் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் அந்த அறிக்கையை எங்களிடத்தில் கொடுத்தார். அந்த அறிக்கையில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அதையெல்லாம் இப்போது நாங்கள் சொல்லமாட்டேன், சட்டமன்றத்தில் வரும். ஏனென்றால், வெளிப்படையாக வைக்கிறோம். எங்களுக்குள் வைத்துக் கொண்டு முடிவெடுக்க மாட்டோம். சட்டமன்றத்தில் வெளிப்படையாக வைத்து, அதற்குரிய நடவடிக்கையை சட்டமன்றத்தின் மூலமாகவே நிறைவேற்றி, அதை நிறைவேற்றிக் காட்டுவோம் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதுதான் அமைச்சரவைக் கூட்டத்தில் நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்.
அடுத்தது, தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவம், நான் அதற்குள்ளே போக விரும்பவில்லை, இது திருமண நிகழ்ச்சி, ஒரு மங்களகரமான நிகழ்ச்சி, தூத்துக்குடி சம்பவம் என்ன என்று உங்களுக்குத் தெரியும். அதுவும் அந்த ஆட்சிக் காலத்தில்தான் நடந்தது. அந்த ஆட்சிக் காலத்தில் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறதே என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அப்படியா? எனக்குத் தெரியாது. நான் டி.வியைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்று சொன்னவர் அவர். அந்த அறிக்கை, ஓய்வு பெற்ற நீதியரசருடைய அறிக்கை, அதுவும் ஒரு மாத காலத்திற்கு முன்பு என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள். அந்த விவகாரங்களை எல்லாம் சட்டமன்றத்தில் வைக்க இருக்கிறோம்.
எதற்காக நான் சொல்கிறேன் என்றால், சட்டமன்றத்தில் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை, கொடுத்தோமோ, அவைகளையெல்லாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி தான், திராவிட மாடல் ஆட்சியாக இருக்கக்கூடிய நம்முடைய ஆட்சி.
ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய முன்னாள் முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், உறுதிமொழிகளை, தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை, நிறைவேற்றவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதற்குத்தான் இதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன்.
இன்றைக்கு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யக்கூடிய அந்தத் திட்டத்தை நாங்கள் வந்தால் நிறைவேற்றுவோம் என்று தேர்தல் நேரத்தில் சொன்னோம். வந்தவுடன் முதல் கையெழுத்துப் போட்டதே அந்தக் கையெழுத்துத்தான். அதுதான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
பால் விலையை குறைத்தோம்.
பெட்ரோல் விலையை குறைத்திருக்கிறோம்.
வருகிற 5-ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். எதற்கு என்று கேட்டால், ஸ்மார்ட் கிளாஸ். மாநகராட்சிப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு, ஒரு திட்டம் வகுத்திருக்கிறோம். டெல்லிக்குச் சென்றபோது அதை நான் பார்த்துவிட்டு வந்தேன். அதைத் தொடங்கி வைக்க வரவேண்டும் என்று கேட்டிருக்கிறேன். வரக்கூடிய அதே நேரத்தில் தான், அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவியர்கள் அவர்களுக்கு மாதந்தோறும் 1000/- ரூபாய் வழங்குவோம் என்ற உறுதிமொழியைக் கொடுத்தோம். அந்தத் திட்டத்தையும் அன்றைக்குத்தான் தொடங்கப் போகிறோம்.
இன்னொன்று இருக்கிறது. இப்போது வருகிறபோது சில தாய்மார்கள் கேட்டார்கள். உரிமைத் தொகை என்னவாயிற்று? மாதம் ரூபாய் 1000 கொடுக்கிறேன் என்று சொன்னீர்களே. வரும், வரும். நிதியை ஓரளவுக்கு சரி செய்து கொண்டிருக்கிறோம், விரைவில் அதையும் சரி செய்து நிச்சயமாக, உறுதியாக அதையும் நிறைவேற்றுவோம் என்பது உறுதி. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நான் கலைஞருடைய மகன், சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின்.
ஆகவே, அந்த நம்பிக்கையோடு இருங்கள், அந்த நம்பிக்கையோடு தான் இன்றைக்கு மக்கள் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.
அந்த மகிழ்ச்சியோடு இன்றைக்கு இந்த மணவிழா நிகழ்ச்சியில் அத்தனை பேரும் கலந்து கொண்டு, நம்முடைய பொங்கலூர் பழனிச்சாமி அவர்கள் இல்லத்தில் அவருடைய பேத்திக்கு, நம்முடைய பைந்தமிழ்ப் பாரியின் அருமை மகள் ஸ்ரீநிதி அவர்களுக்கும், அதேபோல, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.மதியழகன் அவர்களின் அருமை மகன் கௌசிக் தேவ் அவர்களுக்கும் நடந்திருக்கக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன். நேரம் இல்லை, விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். எனவே, சுருக்கமாக என்னுடைய வாழ்த்துரையை அமைத்துக்கொள்ள நான் விரும்புகிறேன். மணமக்கள் எல்லா நலனையும் பெற்று, சிறப்போடு வாழ்ந்திட வேண்டும்.
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய "வீட்டிற்கு விளக்காக... நாட்டிற்குத் தொண்டர்களாக" இருந்து வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.