தமிழ்நாட்டில் சாமி சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், கோவில்களில் இருந்து காணாமல் போன சாமி சிலைகளை கண்டறிந்து அவற்றை மீட்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக கோவில்களில் இருந்து காணாமல் போன சாமி சிலைகளில் 2 சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு கொலராடோ மாகாணத்தில் உள்ள பசடேனா பகுதியில் அமைந்திருக்கும் சைமன் நார்டன் அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டு கோவில் விநாயகர் சிலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழ்நாட்டிலிருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தேவி சிலை ஒன்று, நியூயார்க் நகரில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிலைகளையும் மீட்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒருபகுதியாக சிலைக்கான ஆவணங்களை தயாரித்து, அதனை அமெரிக்க அருங்காட்சியகங்களில் சமர்ப்பித்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.