கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பின்னர் ஜூலை 17ம் தேதி நடந்த இப்போராட்டம் திடீரென கலவரமாக மாறியது. அப்போது பள்ளிக்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் வாகனங்கள், பள்ளிக்குள் இருந்த பள்ளிக்குச் சொந்தமான பேருந்துகள் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களையும் அடித்து சேதப்படுத்தி தீ வைத்து எரித்தனர். மேலும் மாணவர்கள் சான்றிதழ்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதி கலவர பூமியாகக் காட்சியளித்தது. இதனை அடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின்னர் கலவரத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கர், ஆசிரியர் ஹரி பிரியா, கீர்த்திகா ஆகியோர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.
இதையடுத்து மாணவியின் தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளனர். அப்போது, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கும் என ஸ்ரீதியின் பெற்றோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.