கேள்வி 5 : அரசுப் பள்ளிகளில் 17 ஆயிரத்துக்கும் மேலான ஆசிரியர்கள் தேவை உள்ளது. இந்த விவகாரத்தை கல்வித்துறை மெத்தனமாக கையாள்வதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனரே...
பதில் : மெத்தனம் எதுவும் இல்லை . மாணவர்களின் நலனுக்காகவே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையில் இறங்கினோம். அதற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு மாணவர்களின் கற்றலுக்கு சாதகமாக வரும் என்று நம்புகிறோம். தீர்ப்பு வந்த பிறகு, அனைத்து பள்ளிகளிலும் தேவையான ஆசிரியர்கள் நிரப்பப்படுவார்கள். இதற்கிடையே விரைவில் 3,000-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேள்வி 6 : புதிய ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பரிசீலனை செய்யாமல், மீண்டும் போட்டித் தேர்வு எழுதச் சொல்வது ஏன்?
மாணவர்களின் கற்றல் திறனும், கற்பித்தல் திறனும் மேம்படுத்தப்பட வேண்டும். கற்பிக்கும் ஆசிரியர்கள் காலத்துக்கு ஏற்ற வகையில் கற்பிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைதான் இது.
கேள்வி 7 : ஆசிரியர், மாணவர் வருகைப் பதிவேடு மட்டுமின்றி தினமும் ஏராளமான தகவல்களை 'எமிஸ்' செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டி உள்ளதாகவும், இணைய தொடர்பு போதிய அளவில் இல்லாத கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இதனால் மிகவும் சிரமப்படுவதாகவும், அதனால் கற்பித்தல் - கற்றல் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் கூறுகிறார்களே...
மாணவர்களின் வருகை, அவர்களது உடல்நலம், கற்றல் திறன் என அனைத்து தகவல்களும் நமது கைகளில் இருக்கும்போது கல்வி சார்ந்த முன்னெடுப்புகளை மிக வேகமாக, துல்லியமாக செய்யலாம். பள்ளிக் கல்வித்துறையை தவிர்த்து கிட்டத்தட்ட 10 துறைகளுக்கு 'எமிஸ்' செயலி பயன்படும் என்பதுதான் உண்மை.
கேள்வி 8 : நீங்கள் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளதே? தனியார் பள்ளிகளின் அதிக கல்விக் கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களிலும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?
எந்த ஒரு பள்ளிக்கும் ஆதரவான மனநிலையை எப்போதும் நான் எடுப்பதில்லை . அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- நன்றி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்