தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக கொங்கு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி போன்ற இடங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் தொடங்கிவைக்கவுள்ளார். இதற்காக நேற்று கோவை வந்த முதல்வருக்கு ஏராளமானோர் வழிநெடுக வரவேற்பு அளித்தனர்.
வழக்கமாக ஆதாரமே இல்லாமல் தி.மு.க.வை விமர்சிக்கும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வரின் இந்த பயணத்தையும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கூறிய அவர், "கோவையிலும், ஆகஸ்ட் ஈரோடு மாவட்டத்திலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன்.
தி.மு.க.வின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை பணியா? மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா?."என கூறியிருந்தார்.
இந்த நிலையில், வழக்கம் போல இதுவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் பொய்களில் ஒன்றுதான் என்பது உறுதியாகியுள்ளது. அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு கோவை,ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பதிலளித்துள்ளனர்.
இது தொடர்பாக கூறியுள்ள அவர்கள், "அண்ணாமலை கூறியதுபோல எந்த சுற்றறிக்கையும் மாவட்ட கல்வி அலுவலகத்தால் வெளியிடப்படவில்லை" என விளக்கமளித்துள்ளனர். இதைக் குறிப்பிட்டு இணையத்தில் அண்ணாமலையை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.