தமிழ்நாடு

இந்தியாவிலேயே Zero Liquid Discharge அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமை தொகுப்புகளை அரசு உருவாக்க இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே Zero Liquid Discharge அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (23.8.2022) சென்னையில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில் ஆற்றிய உரை:-

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சிறப்பாக நடைபெறக்கூடிய இந்த முதலீட்டாளர் மாநாட்டிற்குத் தலைமை ஏற்று, உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆட்சிப் பொறுப்பேற்று, ஒராண்டு காலம் முடிவுற்ற நிலையில், இந்தத் துறையால் நடத்தப்படக்கூடிய ஏழாவது முதலீட்டாளர் மாநாடு இது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருக்கிறது.

சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, துபாய் என்று பல இடங்களில் இந்த மாநாடு நடைபெற்றபோதிலும் இத்தனை மாநாடுகள், இவ்வளவு குறுகிய காலத்தில் வேறெந்த மாநிலத்திலும் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்றே நான் கருதுகிறேன். இத்துறையைச் சார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் அயராத உழைப்பிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்படுவதும் -

புதிய புதிய தொழில்கள் தொடங்கப்படுவதும் -

தமிழ்நாட்டை ஏராளமான நிறுவனங்கள் நோக்கி வருவதும், வளர்வதும் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு இது அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தொழில் நிறுவனங்கள் தொடங்குவதை எளிதாக்கும் மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறி வந்திருக்கிறது.

குறிப்பாகத் தொழில் துறையானது மிகச் சிறப்பானவர்களால் நிர்வகிக்கப்படுவது இதற்கு முக்கியக் காரணம் என்பதை வெளிப்படையாக நான் இங்கே நான் சுட்டிக்காட்டிப் பாராட்ட விரும்புகிறேன்.

2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை அடைவதற்கு, பெருமளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை (Capital intensive high-tech industries) ஈர்த்திடுவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலை வாய்ப்புகளை அளித்திடும் துறைகள் சார்ந்த தொழில் முதலீடுகளையும் (Employment intensive) ஈர்க்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னால், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்கள் ஒரு கருத்தைச் சொல்லி இருந்தார். 'வளர்ச்சித் திட்டங்கள் என்பவை, வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வளர்ச்சித் திட்டங்களாக அமைய வேண்டும்' என்று சொல்லி இருந்தார். தமிழக அரசைப் பொறுத்தவரைக்கும், எந்தத் திட்டமிடுதலாக இருந்தாலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகத்தான் அது அமையும்; அமைய வேண்டும் என்று நான் அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன்.

இந்தியாவிலேயே Zero Liquid Discharge அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இதை மனதில் வைத்துதான் தமிழக அரசினுடைய அனைத்துத் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன.

பெரும் முதலீடுகள் மேற்கொள்ளக்கூடிய துறைகளான,

செமிகண்டக்டர் உற்பத்தி,

மின் வாகனங்கள் உற்பத்தி,

சோலார் செல்கள்,

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி,

தகவல் தரவு மையங்கள்,

பெட்ரோலியப் பொருட்கள்,

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,

ஜவுளி மற்றும் ஆடைகள்,

காலணி மற்றும் தோல் பொருட்கள்,

நகைகள் மற்றும் ஆபரணங்கள்,

உணவு பதப்படுத்துதல்

போன்ற அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

இவ்வாறான துறைகளில் முதலீடுகளை ஈர்த்திடுவதன் மூலம், அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வலிமையுறச் செய்வதோடு, மாநிலத்தின் உற்பத்திச் சூழலையும் மேம்படுத்த முடியும்.

அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள், பின்தங்கிய மாவட்டங்களில் அமைக்கப்படுவதன் மூலம், அப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன், அந்தப் பகுதியின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைகின்றது. அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியின் இலக்குகளை அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தி வருகிறோம்.

எந்தத் துறையாக இருந்தாலும், அதனை முன்னோக்கிக் கொண்டு செலுத்த ஒரு கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை,

தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை,

தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை,

தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை என்று வரிசையாகப் பல கொள்கை அறிக்கைகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில், காலணி மற்றும் தோல் துறையின் மேம்பாட்டிற்காக, இன்று தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை

2022-ஐ வெளியிடுவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.

பசுமை ஹைட்ரஜன் கொள்கை,

எத்தனால் கொள்கை,

திருத்தப்பட்ட மின் வாகனக் கொள்கை,

திருத்தப்பட்ட வான்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை என்று பல கொள்கைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

இந்தியாவிலேயே Zero Liquid Discharge அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு தொழில் கொள்கை 2021-ன் கீழ் வழங்கப்படும் நிலையான ஊக்கச் சலுகைகளுடன், கூடுதலாக தொழில்நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் ஒன்றும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

எந்த முதலீட்டுச் சூழ்நிலைக்கும் அரசு தயாராக உள்ளது, அதற்கேற்ப திட்டங்களையும் வகுத்து வருகிறது என்பது இதன் மூலம் நிச்சயமாக தெளிவாகும்.

இந்திய அளவில், காலணி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 26 விழுக்காடாகவும், ஏற்றுமதியில் 45 விழுக்காடாகவும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தோல் பொருட்கள், உலகச் சந்தைகளில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்தியாவிலேயே, அதிக அளவிளான காலணிகள், தோல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மையங்கள் அமைந்துள்ள மாநிலமாக நம் தமிழ்நாடு விளங்கி வருகிறது.

ஆம்பூர், இராணிப்பேட்டை, வாணியம்பாடி, வேலூர், பேரணாம்பட்டு, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் சென்னை ஆகியன தோல் மற்றும் தோல் பொருட்களுக்கு முக்கிய மையங்கள்.

இந்தியாவிலேயே, தோல் பதப்படுத்தும் தொழிலகங்களில் எல்லாம் Zero Liquid Discharge அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இந்தத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்காகத்தான் காலணி மற்றும் தோல் பொருட்களுக்கான கொள்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

2025-ஆம் ஆண்டிற்குள், காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் 20,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பது மற்றும் 2,00,000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாக இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சிப்காட்/சிட்கோ மற்றும் பொது - தனியார் கூட்டாண்மை மூலம், 30-50 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் வடிவில் ஆயத்த தொழில் கூடங்களுடன் புதிய தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமைத் தொகுப்புகளை அரசு உருவாக்க இருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி விநியோகச் சங்கிலியில் இருக்கும் இடைவெளிகளை ஆய்வு செய்து, உள்கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

இத்துறைக்கான ஊக்கத்தொகை பெறும் தகுதி அளவுகோல்கள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளது இந்தக் கொள்கையின் சிறப்பம்சமாக அமைந்திருக்கிறது!

அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிப்பது, அதிலும் பெண்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு அளிப்பது, குறிப்பாகப் பள்ளிக்கல்வி வரை பயின்ற பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அளிப்பது போன்ற காரணிகளால், தமிழ்நாடு அரசு, இந்தத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது.

இந்தியாவிலேயே Zero Liquid Discharge அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தோல் அல்லாத காலணிகள் துறை மீது கவனம் செலுத்திடவும் நமது அரசு முனைந்து வருகிறது. தோல் அல்லாத காலணிகள்தான் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கிடும். குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், தோல் அல்லாத உற்பத்திப் பொருட்கள்தான் சந்தையில் 70 விழுக்காட்டுக்கும் அதிக அளவில் விற்கப்படுகின்றன. அதன் பொருட்டே, இன்று வெளியிடப்பட்டுள்ள கொள்கையில், தோல் அல்லாத காலணித் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், உலக அளவில் புகழ்பெற்ற காலணி உற்பத்தியாளர்கள் எல்லாம், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளனர் என்று நான் அறிகிறேன். இயற்கை வளங்களின் பாதுகாப்பை நமது கடமைகளில் ஒன்றாக நாம் ஒவ்வொரும் உணர வேண்டும். இதன் பொருட்டு, பல முற்போக்கு நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே, பல காலணி தயாரிப்பு நிறுவனங்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்திருக்கிறார்கள். பல நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வமும் காட்டி வருகிறார்கள். இந்தக் கொள்கையினால் மேலும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவார்கள்.

2009-ஆம் ஆண்டு செய்யார் SEZ நிறுவனத்தினுடைய தொழில் பிரிவுகளை நான் தொடக்கி வைத்தேன். இது இன்று மாபெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. 2000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்கள். 35 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அதில் 70 விழுக்காடு பேர் பெண்கள். இந்த நிறுவனம் தனது தொழிலை மேலும் விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

1000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 25 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் தைவான் நாட்டைச் சேர்ந்த Hong Fu நிறுவனம், தனது உற்பத்தித் திட்டத்தினை நிறுவிட தமிழ்நாட்டினைத் தேர்ந்தெடுத்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற தோல் அல்லாத காலணி நிறுவனங்களான Nike, Adidas, Reebok, Puma போன்ற நிறுவனங்கள், நேரடியாகத் தமிழ்நாட்டில் உற்பத்தி நிறுவனங்களை நிறுவவில்லை. மாறாக, ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலமே உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறான பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்திட வேண்டுமானால், அதற்கான சூழலமைப்பை வலுப்படுத்திட வேண்டும்.

இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில், 250 ஏக்கர் பரப்பளவில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தற்போது இத்துறைக்கான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்திட வேண்டிய நிலை உள்ளது. இப்பூங்கா அமைக்கப்படுவதன் மூலம், காலணி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களையும் நாமே தயாரிக்க முடியும்.

உலகச் சந்தையில் Make in Tamil Nadu முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்ற நமது இலட்சியத்தை இத்திட்டம் நிறைவேற்றும்.

இன்று, 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 37 ஆயிரத்து 450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், இத்துறை சார்ந்த 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு இருக்கிறோம். இதேபோல் பல நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

இன்று, இங்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட அனைத்து முதலீட்டாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் திட்டங்கள் மென்மேலும் வளர்ச்சி பெற்றிட என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்களும், நம்முடைய அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களும், அதிகாரிகளும் அயராது உழைத்து, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள விரும்புவர்களுக்கு, தொழில் துவங்குவதற்கான சேவைகளைத் தொடர்ச்சியாக அளித்து வருகின்றனர். அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தமிழக அரசின் சார்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

காலணிகள் ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படையானவை. முக்கியமானவை. அதைப் போலத்தான் காலணி மற்றும் தோல் தொழிலும், நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகமிக முக்கியமானது ஆகும். இத்தொழில் மேலும் சிறப்படைய அனைத்து உதவிகளையும் இந்த அரசு உறுதியாக செய்யும் என்று நான் உறுதி அளித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories