ஃபெடரல் வங்கியின் ஒரு பகுதியான ஃபெட் பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன்ஸ் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் தங்க நகைகளுக்கான நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை, அரும்பாக்கம் பகுதியிலுள்ள இந்த வங்கியின் கிளையில் தற்போது ரூ.20 கோடி மதிப்பிலான தங்க நகைகளை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரித்தபோது, இந்த கொள்ளை சம்பவத்தை அந்த வங்கியில் பணிபுரியும் ஊழியரே நடத்தியது தெரியவந்தது.
அதாவது அந்த வங்கியில் பணிபுரியும் ஊழியரான முருகன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வங்கியின் காவலாளிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அவர் மயக்கமடைந்ததும், கட்டிப்போட்டு விட்டு வங்கியின் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான 32 கிலோ தங்கம் என்று சொல்லப்படுகிறது.
இதையடுத்து தற்போது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்தனர். மேலும் கொள்ளையர்களை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுவதாகவும் தமிழக டி.ஜி.பி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று முருகனின் கூட்டாளிகளான பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகளும் நேற்று வெளியாகின.
இந்த நிலையில் தற்போது இந்த கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான முருகனை திருமங்கலத்தில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் மீதமுள்ள நகைகள் பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கொள்ளைசம்பவம் நடந்த இரண்டே நாட்களில் முக்கிய குற்றவாளியான முருகனை தமிழ்நாடு போலிசார் கைது செய்துள்ளது.