மதுரையில் நேற்று உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார்மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு மதுரை விமான நிலைய வளாகத்தில் இறுதி மரியாதையை தமிழக அரசின் சார்பில் செலுத்திட நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்றார்.
அப்போது அங்கு கட்சிக் கொடியுடன் கூடியிருந்த பா.ஜ.க.வினர் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். ராணுவ வீரருக்கு இறுதி மரியாதை செய்திடும் அரசு நிகழ்ச்சியில் கட்சி நிகழ்ச்சியைப் போன்று ஏன் நடந்து கொள்கிறீர்கள்? என அமைச்சர் கேள்வி எழுப்பிட, உடனே அங்கிருந்த பா.ஜ.க.வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலும், குழப்பமும் ஏற்படுத்தினர்.
அமைச்சர் அஞ்சலி செலுத்தி விட்டு ராணுவ வீரரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்ய அவரது சொந்த ஊரான புதுப்பட்டிக்கு செல்ல விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது அங்கு கூடி இருந்த பா.ஜ.க அவரது காரின் மீது செருப்பு வீசியும், கார் கண்ணாடிகளை அடித்தும் தாக்குதலை நடத்திட முற்பட்டனர்.
ஒரு ராணுவ வீரரின் இறப்பில் பா.ஜ.க.வினர் அரசியல் செய்யும் கேவல மான நிலை பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் மற்றும் அனைத்துக்கட்சியினர் மத்தியில் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது.
மேலும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர் உடலுக்கு இறுதி மரியாதை செய்ய அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறை உள்ளது. மாநில அமைச்சர்கள், மாவட்ட அரசு அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மரியாதை செலுத்திய பிறகுதான் அரசியல் கட்சி தலைவர்கள் செலுத்த முடியும்.
இதுதான் அரசு நிகழ்ச்சியின் புரோட்டோகால். இந்த விவரம் கூட தெரியாமல் பா.ஜ.கவினர் அரசியல் ஆதாயத்திற்காக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.