கடந்த ஆண்டு தமிழகத்தின் புதிய டி.ஜி.பி-யாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் சிறப்பாக செயல்பட்ட அவர் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுவந்தார். உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்ட அவர் அதுதொடர்பான பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.
இந்த நிலையில், அவரின் துரித செயல் ஒரு உயிரை காப்பாற்றியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலையில் ஒரு சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு பெரிய அலை வந்ததில் சிறுவன் கடல் அலையில் சிக்கிக்கொண்டார்.
பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் மீட்ட நிலையில், உயிருக்கு போராடிய அவரை அந்த பகுதியில் வந்த டி.ஜி.பி சைலேந்திர பாபு தக்க சமயத்தில் முதலுதவி செய்தார். இதனால் அந்த சிறுவனின் உயிருக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை. பின்னர் அந்த சிறுவனை உடன் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பான வீடீயோவை தமிழ்நாடு காவல்துறை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்த இணையவாசிகள் டி.ஜி.பி சைலேந்திர பாபுவை பாராட்டி வருகின்றனர்.