நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரை ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.கள் தொடர்ந்து விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, வேலையின்மை, ஜி.எஸ்.டி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக் கொண்டது ஒன்றிய அரசு.
மேலும் கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி எம்.பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசைக் கண்டித்து 'கருப்பு' உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 'கருப்பு' உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியைப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, " ஆகஸ்ட் 5ம் தேதி சிலர் விரக்தியில் பிளாக் மேஜிக் பிரச்சாரம் செய்ய முயற்சித்தை நாம் பார்த்தோம். கருப்பு ஆடை அணிவதன் மூலம் தங்களின் விரக்தியைப் போக்கிக் கொள்ள முயல்கின்றனர். பில்லி, சூனிய, மூடநம்பிக்கையால் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பிரதமர் மோடியின் இந்த 'கருப்பு' உடை வெறுப்பு பேச்சுக்கு ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மதுரை மக்களை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் விமர்சித்துள்ளனர். இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டரில்," கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் (சனாதனவாதிகளைத் தவிர) என்பதை நாடறியும்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கருப்பு ஆடை அணிந்து போராடியவர்களை வசைமாரி பொழிந்திருக்கிறார் பிரதமர். ஒரு வாரம் ஆகிவிட்டது. போராடிய எல்லோரும் தொகுதிகளுக்கு வந்துவிட்டோம்.
ஆனாலும் பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறது. அது தான் கருப்பு என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இப்படி எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலரும் பிரதமரின் கருப்பு வெறுப்பு பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.