சென்னை அண்ணா சாலையைச் சேர்ந்தவர் ரவிக்குமார் என்பவர் இரும்பு தகடு விற்பனை செய்யும் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கர்நாடகாவிலிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு போக வேண்டிய இரும்பு தகடுகளை இரு தினங்களுக்கு முன்பு லாரியின் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், இந்த லாரி குறித்த நேரத்தில் அந்த நிறுவனத்தை அடையவில்லை என ரவிக்குமாருக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக அந்த லாரியை ஓட்டிசென்ற செல்வம் என்பவரின் தொலைபேசி எண்ணுக்கு ரவிக்குமார் அழைத்தபோது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மணலி காவல் நிலையத்தில் சுமார் 29 டன் இரும்பு தகடுகள் காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் செல்வம் மற்றும் லாரியை போலிஸார் தேடி வந்தனர்.
அப்போது தகடுகளை ஏற்றி சென்ற லாரி மட்டும் சாலையோரம் நின்று கொண்டிருந்ததை போலிஸார் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த லாரியை காவல்நிலையம் கொண்டுவந்த போலிஸார் லாரி நின்றுகொண்டிருந்த இடத்தில இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர்.
அதன் அடிப்படையில் செங்குன்றம் பகுதியை சேர்ந்த பிச்சாண்டி(37), சந்தோஷ்(34) சுரேஷ்குமார் (36), திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா (43) ஆகிய 4 பேரை பிடித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் ஓட்டுநர் செல்வத்துடன் சேர்ந்து இவர்கள் அனைவரும் ரூ. 30 லட்ச மதிப்புள்ள தகடுகளை திருடியது தெரியவந்தது. பின்னர் ஒரு குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த இரும்பு தகடுகளையும் போலிஸார் மீட்டனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஓட்டுநர் செல்வத்தை போலிஸார் தேடி வருகின்றனர்.
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பாரதிராஜா திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் என்பதும் மற்றொருவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் என்பதும் தெரியவந்துள்ளது.