44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில், தற்போது நடைபெற்று வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி முடிவடைகிறது. கடந்த ஜூலை 28 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த போட்டி தொடரில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெறுகின்றனர்.
இந்த போட்டியின் தொடக்க விழா அண்மையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், போட்டியில் பங்குபெறும் அனைத்து நாட்டினருக்கும் எந்த வித குறையும் இல்லாமல் தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தி வருகிறது. அந்த வகையில் அவர்களுக்கு சுமார் 3500 வகையான உணவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக 77 மெனு கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த உணவு ஏற்பாடுகளுக்காக இந்தியாவின் முன்னணி சமையற்கலைஞரான 50 ஆண்டுகால அனுபவமிக்க சென்னையைச் சேர்ந்த ஜி.எஸ். தல்வார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய உணவுகளை ருசித்த அயல்நாட்டு விளையாட்டு வீரர்கள், அது மிகவும் சுவையாக இருப்பதாக தங்களது வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் கூட ஸ்பெயின் நாட்டின் செஸ் வீரர்கள், சென்னையில் இருக்கும் தனியார் உணவகத்தில் உணவை உண்டு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதாவது ஸ்பெயின் வீரர்களின் கோச் ஒருவர், சென்னை உணவகத்தில், உணவை உண்டுள்ளார். அந்த ருசி அவருக்கு பிடித்துப்போக, அவரது குழுவையும் அங்கு கூட்டி வந்து, அந்த உணவகத்தில் இருக்கும் உணவுகளை வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது சைப்ரஸ் நாட்டின் வீராங்கனை ஒருவர் தமிழ்நாட்டின் உணவை பற்றி கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதாவது, இங்குள்ள உணவுகள் காரமாக இருந்தாலும், மிகவும் சுவையாக இருப்பதாக கூறினார். மேலும் இங்குள்ள உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமாகவும் இருப்பதாகவும், இது நாள் வரை உடலுக்கு எந்த ஒரு கோளாறும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய உணவுகளை பற்றி அதிலும் தமிழ்நாட்டு உணவுகளை பற்றி வெளிநாட்டவர்கள் பாராட்டி வருவது மகிழ்ச்சியளிப்பதாக சமூக வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.