44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில், நேற்று (ஜூலை 28) தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த போட்டி தொடரில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெறுகின்றனர்.
இந்த போட்டியின் தொடக்க விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், போட்டியில் பங்குபெறும் அனைத்து நாட்டினரும் தங்கள் கோடியை மற்றும் நாட்டின் பெயர் பொருந்திய பதாகைகளை ஏந்தி அணிவகுத்து வந்தனர்.
மேலும் இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. செஸ் கட்டத்தின் இருக்கும் 8 கட்டங்களுக்கு ஏற்றவாறு இந்தியாவின் 8 மாநிலத்தின் பாரம்பரிய நடனங்களை நடன கலைஞர்கள் நடனமாடி வந்திருந்த போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
வந்திருக்கும் போட்டியாளர்கள், விருந்தினர்கள் விரும்பத்தக்க வகையில் 77 மெனுகார்டுகள் கொண்ட 3500 உணவு வகைகளை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது. அதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளும் அடங்கும்.
இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் செஸ் வீரர்கள், சென்னையில் இருக்கும் தனியார் உணவகத்தில் உணவை உண்டு பாராட்டு தெரிவித்துள்ளனர். அதாவது வந்திருக்கும் ஸ்பெயின் வீரர் ஒருவர், சென்னை உணவகத்தில், உணவை உண்டுள்ளார். அந்த ருசி அவருக்கு பிடித்துப்போக, அவரது குழுவையும் அங்கு கூட்டி வந்து, அந்த உணவகத்தில் இருக்கும் உணவுகளை வாங்கி கொடுத்துள்ளார்.
மேலும் இது குறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடி அதை மறு ட்வீட் செய்து, "இந்தியாவின் சமையல் பன்முகத்தன்மை புகழ்பெற்றது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் நீங்கள் ஒரு உணவைக் காண்பீர்கள். நீங்கள் சென்னையை ரசித்து நகரத்தை சுற்றிப் பார்ப்பதில் மகிழ்ச்சி." என்று குறிப்பிட்டுள்ளார்.