கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் கலவரமாக மாறியதில், அந்த பள்ளியிலுள்ள பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்கள் சூறையாடபட்டது.
இதனால் அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் பள்ளி வாகனத்திற்கு தீ வைத்ததோடு காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்தனர். பின்னர் இந்த போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளரும் கைது செய்யப்பட்டதோடு, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டி.ஜி.பி உத்தரவிட்டார். அதோடு இந்த வன்முறையில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைத்து கலவரக்காரர்களையும் கைது செய்வதற்காக காவல்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, சமூக வலைதளங்களில் இந்த விவகாரத்தில் போலியான தகவல்களை பரப்புவதாக சிலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தநிலையில், கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக வாட்ஸ்அப் குழு அட்மின்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கராபுரம் புது பல்லகச்சேரி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன், கச்சாகுடியை சேர்ந்த அய்யனார், வேப்பூரை சேர்ந்த விஜய், மட்டபாறையை சேர்ந்த துரைப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது வாட்ஸ்அப் குழு அமைத்து கலவரத்தை தூண்டியது உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.