காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் தொழில் கண்காட்சி விழா நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு டெக்ஸ்போ தொழில் மலரை வெளியிட்டார்.
பின்னர் இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், "தமிழ்நாடு முழுவதும் 14347 தொழில் மனைகள் உடன் 127 தொழிற்பேட்டைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் நபர்கள் நேரடியாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். 402 ஏக்கர் பரப்பில் ரூ.217 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டை பணிகள் நிறைவடைய உள்ளது.
நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு 3 வது இடத்தில் உள்ளது. 2019 - 2020 ஆம் நிதியாண்டில் 2.21 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் ஏற்றுமதி 2020 - 2021 ஆம் நிதி ஆண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக 1.92 லட்சம் கோடியான ஏற்றுமதி சரிந்து தி.மு.க ஆட்சியில் எடுத்த நடவடிக்கை காரணமாக 2.62 லட்சம் கோடியாக ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
ஒன்றிய தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டம் ரூ.3340 கோடி ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது. கடன் உத்தரவாதம் வழங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்" என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.