44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில், நேற்று (ஜூலை 28) தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த போட்டி தொடரில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெறுகின்றனர்.
இந்த போட்டியின் தொடக்க விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், போட்டியில் பங்குபெறும் அனைத்து நாட்டினரும் தங்கள் கோடியை மற்றும் நாட்டின் பெயர் பொருந்திய பதாகைகளை ஏந்தி அணிவகுத்து வந்தனர்.
மேலும் இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. செஸ் கட்டத்தின் இருக்கும் 8 கட்டங்களுக்கு ஏற்றவாறு இந்தியாவின் 8 மாநிலத்தின் பாரம்பரிய நடனங்களை நடன கலைஞர்கள் நடனமாடி வந்திருந்த போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
மேலும் அந்த விழாவில், லிடியன் நாதஸ்வரம் இசை நிகழ்ச்சியில் வந்திருந்த அயல்நாட்டு போட்டியாளர்கள் தங்களை மெய்மறந்து ரசித்தனர். இந்த கலைநிகழ்ச்சிகளில் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசின் உபசரிப்பிலும் எந்த குறையும் இல்லை என்று அயல்நாட்டு வீரர்கள் தங்கள் சமூக வலைதளபக்கத்தின் வாயிலாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதில், சில நாட்களுக்கு முன்பு பிரபல ஸ்பானிய கிராண்ட் மாஸ்டர் வீரரான பிரான்சிஸ்கோ வலேஜோ, தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள், வரவேற்புகள், நடவடிக்கைள் குறித்து பெருமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டினார். மேலும் தான் இங்கு குறை கூறுவதற்காக ஆர்வமாக வந்தேன், ஆனால் தமிழ்நாடு அரசின் ஏற்பாடுகள் தன்னை ஆச்சர்யப்பட வைத்துள்ளது என்று பாராட்டினார்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற தொடக்கவிழாவை தொடர்ந்து, ஜெர்மனிய செஸ் பெடெரேஷன் இயக்குநரான கெவின் ஹோகி, "என்ன ஒரு காவியமான செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இது! நேரடி இசை, நடனங்கள், பாடகர் குழு. நேற்று தமிழ்நாடு, சென்னையில் நாம் பார்த்த காட்சிகளால் பிரதிநிதிகள் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். இறுதியில் நானே அந்த விழாவில் ஒரு பகுதியாக ஆனேன்" என்று குறிப்பிட்டு பாராட்டை தெரிவித்துள்ளார்.
மேலும் "செஸ் உற்சாகம் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டுமா? திறப்பு விழாவுக்கான எங்கள் பயணத்தில் நேற்று கடந்து சென்ற சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தை பாருங்கள்! சதுரங்கம் இந்தியாவில் எல்லா இடங்களிலும் உள்ளது. தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்தது முற்றிலும் சரியான தேர்வாக இருக்கிறது" என்று தனது ட்விட்டர் வாயிலாக புகழ்ந்துள்ளார்.
தொடர்ந்து மற்றொரு நாட்டை சேர்ந்த வீராங்கனையான பியோன் ஸ்டீல் அண்டோனி என்பவர், "நான் இங்கு 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருந்தேன். ஆனால் சென்னையில் கிடைத்த முதல் வரவேற்பே முற்றிலும் சிறப்பானதாக இருந்தது. விமான நிலையத்தின் வழியாகச் சென்றால், எல்லா இடங்களிலும் மிகவும் அன்பான வரவேற்பு மற்றும் தொலைவில் இருந்தாலும், ஹோட்டல் மிகவும் நன்றாக இருக்கிறது மற்றும் உணவு அருமையாக உள்ளது." என்று புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து வேறோரு நாட்டை சேர்ந்த செஸ் வீரர், "செஸ் ஒலிம்பியாட் மீது சென்னை மற்றும் இந்தியாவின் கவனம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. எல்லா இடங்களிலும் அடையாளங்கள் உள்ளன. 'மஸ்கோத் தம்பி'. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த அமைப்பாளர்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்." என்று பாராட்டியுள்ளார்.
உலக செஸ் கூட்டமைப்பின் (FIDE) தலைமை சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பு அதிகாரியாக இருக்கும், டேவிட் தனது ட்விட்டர் பக்கத்தில், " இதுவரை நான் பார்வையிட்ட 61 நாடுகளில், இந்தியா தான் எனக்கு மிகவும் பிடித்த நாடு. நான் சென்ற பெரும்பாலான இடங்களில் அற்புதமான விருந்தோம்பலை அனுபவித்த பாக்கியம் கிடைத்துள்ளது. ஆனால் இங்குள்ள மக்கள், வேறு எங்கும் இல்லாத வகையில் தங்கள் இதயத்தை உங்களிடம் திறக்கிறார்கள்." என்று தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளனர்.