தமிழ்நாடு

“சில நிகழ்வுகள் மனவேதனை அடைய வைத்துள்ளன.. தற்கொலை எண்ணம் கூடாது” : மாணவர்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் !

“தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. தலைநிமிரும் எண்ணம் தான் இருக்கவேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை கூடாது. உயிர்ப்பிக்கும் சிந்தனையே தேவை” என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“சில நிகழ்வுகள் மனவேதனை அடைய வைத்துள்ளன.. தற்கொலை எண்ணம் கூடாது” : மாணவர்களிடம் முதலமைச்சர்  வேண்டுகோள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.07.2022) சென்னை, குருநானக் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அண்மைக் காலமாக தமிழகத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கிறபோது எனக்கு உள்ளபடியே மனவேதனையாக இருக்கிறது. கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள், அந்தக் கல்வி நிறுவனங்களை தொழிலாக, வர்த்தகமாக நினைக்காமல் தொண்டாக, கல்விச் சேவையாகக் கருத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாணவச் செல்வங்கள், பட்டங்கள் வாங்குவதற்காக மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வரவில்லை. முதலில் தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி ஆகியவற்றை அவர்களுக்கு நீங்கள் அளிக்க வேண்டும். எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் வளர வேண்டும்.

உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள், அவமானங்கள், இடையூறுகள் ஆகியவற்றை மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

“சில நிகழ்வுகள் மனவேதனை அடைய வைத்துள்ளன.. தற்கொலை எண்ணம் கூடாது” : மாணவர்களிடம் முதலமைச்சர்  வேண்டுகோள் !

''பாதகம் செய்வோரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா

மோதி மிதித்துவிடு பாப்பா

அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா'' - என்று பாடினார் மகாகவி பாரதியார் அவர்கள்.

மாணவியர்க்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தொல்லை தரும் எத்தகைய இழி செயல் நடந்தாலும் தமிழ்நாடு அரசு நிச்சயமாக சொல்கிறேன், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உடனடியாக அதற்குரிய தண்டனையைப் பெற்றுத் தரும்.

எந்தச் சூழலிலும் தற்கொலை எண்ணத்துக்கு மாணவிகள் தள்ளப்படக் கூடாது. இந்த இடத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால் எத்தனையோ சோதனைகளைக் கடந்துதான் இங்கே நீங்கள் வந்திருக்கிறீர்கள். சோதனைகளைச் சாதனைகள் ஆக்கி வளர்ந்தாக வேண்டும்.

தமிழ்நாட்டு மாணவ மாணவியர் அறிவுக் கூர்மை கொண்டவர்களாக மட்டுமல்லாமல், உடலுறுதியும் மனதைரியமும் கொண்டவர்களாக வளர வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை, என்னுடைய கனவு.

“சில நிகழ்வுகள் மனவேதனை அடைய வைத்துள்ளன.. தற்கொலை எண்ணம் கூடாது” : மாணவர்களிடம் முதலமைச்சர்  வேண்டுகோள் !

அத்தகைய கல்வியை, அறிவை, ஆற்றலை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். படிப்போடு கல்வி நிறுவனங்களின் பணி முடிந்துவிடவில்லை. பாடம் நடத்துவதோடு ஆசிரியர்களின் பணியும் முடிந்து விடுவதில்லை. குழந்தைகளை பெற்றதோடு பெற்றோரின் பணி எப்படி முடியாததோ அது போல படிப்போடு ஆசிரியர் பணி முடிந்து விடாது.

மாணவச் செல்வங்களே, தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. தலைநிமிரும் எண்ணம் தான் இருக்கவேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை கூடாது. உயிர்ப்பிக்கும் சிந்தனையே தேவை.

ஆசிரியர்களாக இருந்தாலும், பெற்றோர்களாக இருந்தாலும் மாணவ, மாணவியரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். மாணவர்களும், உங்களுடைய பிரச்சனைகளையும், நோக்கங்களையும், கனவுகளையும் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பிய அரசு இங்கே அமைந்திருக்கிறது.

மக்கள் மனப்பூர்வமாக பாராட்டக்கூடிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களின் மூலமாக மக்களை இரு கை கொண்டு தூக்கி விடும் ஆட்சியாக இது அமைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி, நம்முடைய மாணவ சமுதாயம் வளரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories