கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 22 வயதான ஜோயல் என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், விடுமுறை தினம் என்பதால் குளிப்பதற்காக புதிய இடத்தை தேடிய போது இன்டர்நெட்டில் திருக்குறுங்குடி மலைப்பகுதி தெரியவந்துள்ளது. உடனே இவருடன் படிக்கும் மாணவர்கள் 5 பேரும், மாணவிகள் 6 பேரும் என 11 பேர் திருக்குறுங்குடி மலைப்பகுதியில் உள்ள நம்பி கோயிலுக்கு சென்றுள்ளனர்.
பின்னர் நம்பி பெருமாள் கோயிலுக்கு மேலே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். இந்த பகுதி வனத்துறையால் தடைசெய்யப்பட்ட பகுதியாகும். அங்கு சென்ற மருத்துவ மாணவர்கள் அங்கு குளித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது ஜோயல் என்ற மாணவர் அங்குள்ள தடாகத்தில் குதித்துள்ளார்.
அவருக்கு அரைகுறையாக மட்டுமே நீச்சல் தெரிந்த நிலையில் நீரில் இருந்து வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கியுள்ளார். அவரை உடன் வந்த மாணவர்கள் நீரில் தேடி மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர். பின்னர் அங்கு அவருக்கு முதலுதவியும் செய்துள்ளனர்.
ஆனாலும், மாணவர் ஜோயல் அதிக நீர் குடித்த காரணத்தால் மரணமடைந்துள்ளார். உடனே சக மாணவர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின் அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் மாணவனை கம்பில் துணி கொண்டு கட்டி, சுமார் 2 கிலோ மீட்டர் மலைப்பகுதியில் நீர் வழித்தடத்திலேயே சுமந்து கொண்டு வந்தனர்.
பின்னர் மாணவர் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.