கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கலையரங்கில் கவிபேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் கொண்டாட்டமும், சினிமா துறையில் 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக "வைரமுத்து இலக்கியம் 50" என்ற பெயரில் இலக்கிய பெருவிழா நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி, அமைச்சர் துரைமுருகன், இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா, வெற்றி தமிழர் பேரவை தலைவர் முத்தையா, பாரதி வித்யபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதில் உரையாற்றிய எம்.பி பா.சிதம்பரம், 21ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிக சிறந்த கலைஞன் கவிஞன் வைரமுத்து என புகழ்ந்தார். வைரமுத்து கவி பாடுகின்ற காலத்தில் நாங்கள் வாழ்வதில் மகிழ்ச்சி என தெரிவித்த அவர் வைரமுத்து தான் நூற்றாண்டு கவி என கூறினார்.
வைரமுத்து 17 வயதில் இருந்து புத்தகம் எழுத தொடங்கியவர். வடுகபட்டியில் இருந்து வாஷிங்டன் வரை புகழை பரப்பி இருக்கிறார். வடுகபட்டி தந்த தமிழ் குழந்தை கவி பேரரசாக உருவானதை கண்டு நான் பூரிப்படைகிறேன். வடுகபட்டி போன்ற கிராமம் தற்போது தமிழகத்தில் இல்லை, ஆனால் பீகார், உத்தரபிரதேசத்தில் உள்ளது.
நான் எங்கு சென்றாலும் உணவு விலையை கேட்டறிவேன். ஏனெனில் உணவு விலை தான் பொருளாதாரத்தை தீர்மானிக்கும். இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி இறந்து போய்க் கொண்டிருக்கிறது. கிரேக்க நாட்டு, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் பல்வேறு மொழிகள் அழிக்கப்பட்டு விட்டது. மொழி என்பது மிகவும் முக்கியம், ஆட்சியில் இல்லாத மொழி அழிந்து போகும்.
இந்தியாவில் ஒரு மொழி தான் என்றால் அதனை திணிக்க திணிக்க பிற மொழிகள் அழிந்துபோகும். தமிழ் மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இன்னொரு மொழிக்கு இடம் தந்து விட கூடாது. தமிழ் மொழி தான் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களை இணைக்கும். தமிழ் மொழி பொலிவுடன் இருக்கும் வரை உங்களை (வைரமுத்து) வாழ்த்தும் தமிழை வளர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு (வைரமுத்து) உள்ளது” என தெரிவித்தார்.